Published : 27 May 2021 03:11 AM
Last Updated : 27 May 2021 03:11 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லும்போது ஏற்படும் இடர்பாடுகளைதீர்க்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் நாள்தோறும் காலை 8 மணி முதல், இரவு 8 மணி வரையில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் தற்போது தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில்உள்ளது. இக்காலத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய பணிகள் தங்கு தடையின்றி நடைபெற ஏதுவாகவும், வேளாண் விளைபொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஓர் இடத்திலிருந்து, மற்றொரு இடத்துக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும்போது ஏற்படும் இடர்பாடுகள் உள்ளிட்டவற்றைத் தீர்க்க ஏதுவாகவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் விவசாயிகள் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை, வருவாய் மற்றும் காவல் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தலைமையின் கீழ் இந்த உதவி மையம் மே 26-ம் தேதி (நேற்று) முதல் செயல்பட்டு வருகிறது.
நாள்தோறும் காலை 8 மணி முதல், இரவு 8 மணி வரையில் செயல்படும் இந்த உதவி மையத்தை விவசாயிகள் 918220681987 என்ற அலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு, அதிகாரிகளிடம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் உள்ளிட்டவற்றைத் தெரிவித்து, தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT