Published : 27 May 2021 03:11 AM
Last Updated : 27 May 2021 03:11 AM
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே 4 ஐம்பொன் சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருச்சுழி - கமுதி சாலையில் அபிராமம் சாலை சந்திப்பு பகுதியில் வீரசோழன் எஸ்.ஐ. முத்துப்பாண்டி தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் போலீஸாரை கண்டதும் தப்ப முயன்றனர். போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அப்போது, அவர்கள் அம்மன் சிலையை வைத்திருந்தது தெரியவந்தது. சந்தேகம் அடைந்த போலீஸார், பிடிபட்ட இருவரையும் நரிக்குடி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த பழனிச்சாமி, கூறிப்பாண்டி என்பதும், இவர்கள் கட்டிடத் தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்து.
மேலும் அவர்கள் வைத்திருந்தது ஐம்பொன் சிலை என்பதும் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இவர்களது கூட்டாளியான மினாக்குளத்தைச் சேர்ந்த பூசாரி சின்னையா என்பவர் வீட்டில் மேலும் 3 சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, பூசாரி வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான புத்தர், விநாயகர் மற்றும் மற்றொரு அம்மன் சிலையையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, பூசாரி சின்னையா மற்றும் அவரது கூட்டாளி பழனிமுருகன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். நரிக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT