Published : 25 May 2021 03:12 AM
Last Updated : 25 May 2021 03:12 AM
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், பொதுமக்களின் நலன் கருதி வாகனங்களில் காய்கறி விற்பனை நேற்று தொடங்கியது.
கோவை மாநகராட்சி சார்பில்நடமாடும் காய்கறிகள் விற்பனை அங்காடிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு மண்டலத்துக்கு 10 வாகனங்கள்என்ற அடிப்படையில், 50 வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனைசெய்யப்படுகின்றன.
உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று காய்கறி விற்பனை வாகனங்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தனர். மேலும், 2 வார்டுகளுக்கு ஒரு கிருமிநாசினி தெளிப்பு இயந்திரம் என 50 இயந்திரங்களின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் அ.சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் வாங்க வாகனங்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உழவர் சந்தையில் என்ன விலைக்கு விற்கப்பட்டதோ, அதே விலைக்கு 106 வகையான காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும்.
மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளிலும் வாகனம் மூலமாக காய்கறி விற்பனை செய்யப்படவுள்ளது. தற்போது மாநகராட்சி பகுதிகளில் 50 வாகனங்களில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியார் சார்பில் 500 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 401 வாகனங்களுக்கு காய்கறி விற்பனை செய்ய அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. யார் விரும்பினாலும் காய்கறி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படும். காய்கறி விற்பனையை கண்காணிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதிக விலைக்கு காய்கறி, பழங்கள்விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்பு எண்கள்
அதன்படி, கிழக்கு மண்டலத்துக்கு மதுசூதனன் - 9894065592, மேற்கு மண்டலத்துக்கு மேனகா குமாரி - 9894507629, வடக்கு மண்டலத்துக்கு கார்த்திகேயன் - 9786631660, தெற்கு மண்டலத்துக்கு மணி - 9943997274, மத்திய மண்டலத்துக்கு ஆனந்தி - 9994056109 ஆகியோரை குறிப்பிட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அனுமதிச்சீட்டுபெறுவதற்காக சொந்த வாகனம்வைத்திருப்பவர்கள் நேற்று மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வாகனங்களுடன் திரண்டனர்.சிங்காநல்லூரில் உள்ள மண்டலஅலுவலகத்தில் சரக்கு ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் நின்றன.
திருப்பூர்
இதைத்தொடர்ந்து, மாநகராட்சியின் அனுமதி பெற ஏராளமானவியாபாரிகள் திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் நேற்று வரிசையில் காத்திருந்தனர். இதற்கிடையே வெள்ளகோவிலில் இல்லங்களுக்கே வண்டிகளில் சென்று காய்கறி விற்பனை செய்யும் பணியினை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
தடையின்றி கிடைக்க ஏற்பாடு
திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கூறும்போது, "அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பழ வகைகள் மற்றும் மளிகைப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏதுவாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை, தோட்டக்கலை என அந்தந்த பகுதியின் உதவி இயக்குநர்களை தொடர்புகொள்ளலாம்" என்றார்.
உடுமலை வியாபாரிகள் எதிர்பார்ப்பு
வீடுகள்தோறும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வகையில், உடுமலையில் வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கும் நிகழ்ச்சிநேற்று நடைபெற்றது. தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் கோபிநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர். முதல் நாளான நேற்று 25 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. உடுமலைசுற்று வட்டாரப் பகுதிகளில் 111 வாகனங்களுக்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது. மக்களின் தேவையை கருத்தில்கொண்டு கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.வியாபாரிகள் கூறும்போது, "காய்கறி மொத்த சந்தை இயங்காதநிலையில் அவற்றை விவசாயிகளின் தோட்டத்துக்கே சென்று தனித் தனியாக கொள்முதல் செய்ய வேண்டியுள்ளதால், ஒரே இடத்தில் மொத்தமாக கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துதர வேண்டும்" என்றனர்.
240 வாகனங்களுக்கு அனுமதி
உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய வட்டாரங்களில் தோட்டக்கலைத் துறை, உழவர் உற்பத்தியாளர் குழு, மகளிர் திட்டம், நகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாக காய்கறி விற்பனைக்கு 240 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 முதல் மதியம் 1 மணி வரை விநியோகிக்கப்படும் என்று, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சிபிலா மேரி கூறினார். முழு ஊரடங்கை மீறிய 77 பேர் மீது வழக்கு: வாகனங்கள் பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, அத்தியாவசிய காரணங் களுக்காக அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. பெரும்பாலான வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டன.கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்தின் காரணமாக சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.இதற்கிடையே அவசியம் இன்றி வாகனங் களில் வந்த பலரை போலீஸார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விதிமீறிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "முழு ஊரடங்கை பின்பற்றாமல் வெளியில் சுற்றியதாக காவல் நிலையங்கள் வாரியாக வழக்குபதிந்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று மதியம் நிலவரப்படி உடுமலையில் 27, மடத்துக் குளம் - 6, குடிமங்கலம் - 12, குமரலிங்கம் - 14, கணியூர் - 4, தளி - 9, அமராவதி நகர் - 5 என 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,77வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்றனர். காய்கறி, மளிகை விற்பனை வாகனங்களுக்கு அனுமதி பெறுவதற்காக, திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் நேற்று காலை திரண்ட வியாபாரிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT