Published : 25 May 2021 03:12 AM
Last Updated : 25 May 2021 03:12 AM
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.
சிகிச்சைக்கான படுக்கைகளும், தீவிர சிகிச்சைக்கான படுக்கைகளுக்குமான தேவைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2-வது அலையில் முதியவர்கள், இளைஞர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால், நுரையீரலில் பரவும் தொற்றின் தீவிரத்துக்கு சிகிச்சை அளிப்பது அவசியமாகியுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பலரும் ஆக்சிஜன் படுக்கைக்கு அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரை சேர்ந்த 72 வயது முதியவருக்கு கரோனா தொற்றால் நுரையீரலில் பாதிப்பு அதிகமான நிலையில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை தேவை என கோரப்பட்டது. ஆனால், திருப்பூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எங்கும் ஆக்சிஜன் படுக்கை எங்கும் இல்லை என தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாராபுரம் அரசு மருத்துவமனைகளில் அவரது குடும்பத்தினர் முயற்சி செய்தும் பலனில்லை.இதையடுத்து, காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஆக்சிஜன் பேருந்தில் நேற்று முதலுதவி சிகிச்சை அளித்து, 2 நாட்கள் போராட்டத்துக்கு பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
தொடரும் காத்திருப்பு
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறும்போது, "ஒரு பெரும் ஆபத்துக்குகூட உதவி செய்ய முடியாத நிலையில்தான் மருத்துவமனைகள் உள்ளன. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 பேர் காத்திருக்கிறார்கள்.அதன் பின்னர்தான் சேர்த்துக் கொள்ள முடியும் என்கின்றனர். இது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. நோயாளியின் தன்மை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. எனவே, வட்டார அளவில் ஆக்சிஜன் வசதி படுக்கை வசதியை மேம்படுத்த வேண்டும்" என்றனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,317 ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நாள்தோறும் சுமார் 1,500 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் 45 சதவீதத்துக்கு மேற்பட்டோர் தீவிர தொற்று பாதிப்புக்கு பின் வரக்கூடிய சூழலில், ஆக்சிஜன்படுக்கைகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், ஆக்சிஜன் படுக்கையின் எண்ணிக்கையை மாவட்ட அளவில் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்க தொடங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநரும், மருத்துவருமான ஜெகதீஷ்குமார் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் 1,317 ஆக்சிஜன்படுக்கைகள் உள்ளன. சமீப நாட்களாகஆக்சிஜன் படுக்கைகளின் தேவை அதிகரித்துள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT