Published : 24 May 2021 03:11 AM
Last Updated : 24 May 2021 03:11 AM
ஒருவார கால முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பல்வேறு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சமூக இடைவெளியை மறந்து மார்க்கெட் பகுதிகளில் நேற்று மக்கள் குவிந்தனர். இதனால், ரயில்வே சாலை உட்பட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழக அரசு கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த 10-ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இந்நிலையில், தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு 24-ம் தேதி (இன்று) முதல் ஒருவார காலத்துக்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தது. இதனால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று அனைத்து கடைகளும் திறந்திருக்க அரசு அனுமதியளித்தது.
இதன்பேரில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. இதில், காஞ்சிபுரம் நகரப் பகுதியில் உள்ள ராஜாஜி மார்க்கெட் மற்றும் ரயில்வே சாலையில் உள்ள மொத்தம் மற்றும்சில்லரை வியாபார மளிகை கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதனால், மார்க்கெட் மற்றும் மளிகைகடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் காலை 6 மணிமுதலே பொதுமக்கள் குவிந்தனர்.மேலும், மார்ககெட்டில் முண்டியத்துக் கொண்டு காய்கறிகளை வாங்கியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி, வியாபாரிகள் சிலர் காய்கறிகளை மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்தனர். இதனால், ஏழை - எளிய மக்கள் காய்கறிகளை வாங்க முடியாமல் தவித்தனர்.
இதேபோல், மீன் மற்றும் இறைச்சி அங்காடிகளிலும் கூட்ட நெரிசல் நிலவியது. இதனால், நகரின் முக்கிய சாலையான ரயில்வே சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், பல்வேறு பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் மளிகை பொருட்களை வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றதால், வடக்கு ராஜவீதி, ரயில்வே சாலை, காமராஜர் வீதி,காஞ்சி- வேலூர் செல்லும் சாலை,கம்மாளத் தெரு ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, போக்குவரத்து நெரிசலை சீரமைக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, மேற்கண்ட சாலைகளில் போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பஜார் பகுதிகளில் நேற்று காலை முதல்ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். ஆகவே, அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு வாரத்துக்கு கடைகள் செயல்படாது என்பதால், காய்கறி வியாபாரிகள், நேற்று காய்கறி விலையை 3 மடங்கு, 4 மடங்கு உயர்த்தி, விற்பனை செய்தனர். இதனால் ஏற்கெனவே ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாயினர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT