Published : 23 May 2021 05:51 AM
Last Updated : 23 May 2021 05:51 AM
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் மகப்பேறு கட்டிடம் தற்காலிக கரோனா வார்டாக மாற்றப்பட்டு அதில் 25 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட புதிய பிரிவு தொடங்கப்பட்டது. இந்தப் பிரிவு முழுவதையும் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.18 கோடியில் புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் முதல் கட்டமாக 25 ஆக்சிஜன் படுக்கைகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் தொடக்க விழாநேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருகின்றன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதல் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் மொத்தம் 672 படுக்கைகள் உள்ளன. இதில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள 375 படுக்கைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் 260 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், 115 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள் அடங்கும்.
தற்போது இந்த மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலக் கட்டிடத்தில் 250 படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைஅளிக்க 25 ஆக்சிஜன் இணைப்பு கொண்ட படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் படிப்படியாக ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும். பொதுமக்கள் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடித்து தங்களையும், தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், கு.செல்வப்பெருந்தகை, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்) மருத்துவர் குருநாதன், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பலர் படுக்கை கிடைக்காமல் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்லும் நிலை உள்ளது. சிலர் மூச்சுத் திணறலுடன் அவதியுற்று வருகின்றனர்.
எனவே புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை விரைவில் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அங்குள்ள 250 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன்வசதி அளிக்க வேண்டும் என்றுபொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT