Published : 21 May 2021 03:12 AM
Last Updated : 21 May 2021 03:12 AM

விழுப்புரத்தில் கிறிஸ்தவ திருச்சபை பணம் கையாடல் : முன்னாள் பொருளாளர் கைது

விழுப்புரம்

விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் 80 சென்ட் பரப்பளவில் கிறிஸ்தவ திருச்சபைக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த இடத்தை விற்பனை செய்ய திட்டமிட்டு சென்னை தி.நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் ரூ.13 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கு முன்பணமாக நேரடியாகரூ.1 கோடியே 62 லட்சமும்,ரூ.4 கோடியே 98 லட்சத்து15 ஆயிரத்தை வரைவோலையாகவும் பெற்று அதனை திருச்சபையின் மத்திய கருவூலகணக்கில் வரவு வைக்குமாறு அப்போதைய செயலாளராக இருந்த சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சார்லஸ் என்பவரிடம் திருச்சபை சார்பில் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த வரைவோலையில் குறிப்பிட்ட தொகையை திருச்சபை கணக்கில் வரவு வைக்காமல் சார்லஸ் மற்றும் அப்போதைய பொருளாளராக இருந்த மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரை அடுத்த கீழமேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஞானராஜ் ஆகியோர் சேரந்து திருச்சி அடுத்த திருவெறும்பூரில் உள்ள ஒரு வங்கியின் மூலம் அந்த திருச்சபை பணத்தை கையாடல் செய்துவிட்டனர். இதற்கு வில்பர்ட் டேனியல், ஆல்பர்ட் இன்பராஜ் என்பவர் களும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருச்சபையின் தற்போதைய பொருளாளரான ஆண்ட்ரூஸ் ரூபன் எஸ்பி ராதா கிருஷ்ணனிடம் அண்மையில் புகார் அளித்தார். அதன்பேரில். மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சார்லஸ், ஞானராஜ், வில்பர்ட் டேனியல், ஆல்பர்ட் இன்பராஜ் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடிஉள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் போலீஸார் நேற்று முன்தினம் திருச்சபையின் முன்னாள் பொருளாளரான ஞானராஜை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சார்லஸ், வில்பர்ட் டேனியல், ஆல்பர்ட் இன்பராஜ் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x