Published : 20 May 2021 03:12 AM
Last Updated : 20 May 2021 03:12 AM
கரோனா தொற்றைக் கட்டுப்படுத் தும் பணிக்காக, கடந்த ஆண்டு சுகாதார ஆய்வாளர்களை தமிழக அரசு நியமித்தது. கரோனாவின் முதல் அலை ஊரடங்கின்போது, சுகாதார ஆய்வாளர் நிலை-2 பதவியில், 3,039 பேர் நியமிக்கப்பட்டனர். ‘அவுட் சோர்சிங்’ அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம், இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் களப்பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது:
பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள் இரண்டாண்டு கால பட்டயப்படிப்பை முடித்துவிட்டு, நல்ல சம்பளத்தில் பார்த்து வந்த தனியார் வேலையையும் உதறிவிட்டு,பேரிடர் நேரத்தில் கடந்த ஆண்டுமுதல் பணியாற்றத் தொடங்கினோம். ஓராண்டு நிறைவடைந்தும், எங்களின் சம்பளப் பிரச்சினை களையப்படவில்லை. மாதம் ரூ.27,000 என சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.18,850 மட்டுமே தருகின்றனர். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. ஆட்கள் பற்றாக்குறையால், பணிச்சுமையும், மனச்சுமையும்தான் அதிகரித்துள்ளது.
உணவு - உடல்நிலை?
கரோனா பரிசோதனைக்கான ஸ்வாப் பரிசோதனை, முடிவுகள் பெறுவது, தொற்றாளரைக் கண்டறிந்து அவரை வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது தொடங்கி, அவரைத் தொடர்ந்து கண்காணிப்பது மற்றும் அவர்களது குடும்பத்தாரை கண்காணிப்பது உட்பட பல்வேறு பணிகளை களத்தில் செய்கிறோம்.எங்களில் பெரும்பான்மையானோர், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கரோனா காலத்தில் குடும்பத்தை விட்டுப்பிரிந்து, வெளியே அறை எடுத்து தங்குவது தொடங்கி உணவுமற்றும் இதர செலவுகள் எனஅனைத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. இருசக்கர வாகனத்துக்கான எரிபொருள் நிதியும் முறையாக வழங்கப்படுவதில்லை, வாங்கும் சம்பளத்திலேயே அதற்கும் செலவழிக்க வேண்டி உள்ளது.
கரோனா இரண்டாம் அலையில் எங்களில் பலர் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 70 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுமார் 40முதல் 100-க்கும் மேற்பட்டோர் என தேவைக்கேற்ப நியமிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு மாதந்தோறும் சம்பளத்தை உரிய தேதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார் கூறும்போது ‘‘சுகாதார ஆய்வாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக எனக்கு எந்தத் தகவல் தெரியவில்லை. தமிழக முதல்வர் வருகை தொடர்பான நிகழ்வில் இருப்பதால் பிறகு பேசுகிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT