Published : 17 May 2021 03:15 AM
Last Updated : 17 May 2021 03:15 AM

திருப்பத்தூர், வாணியம்பாடியில் - கரோனா தொற்றுக்கு 2 சித்தா சிகிச்சை மையங்கள் : அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்

திருப்பத்தூரில் சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார். அருகில், ஆட்சியர் சிவன் அருள் உள்ளிட்டோர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர், வாணியம்பாடியில் கரோனா தொற்றுக்கு 2 சித்தா சிகிச்சை மையங்களை கைத்தறி துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4 அரசு மருத்துவ மனைகள், சிறப்பு சிகிச்சை மையங்கள், கரோனா சிறப்பு சிகிச்சை மையம் என மொத்தம் 16 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு சுமார் 2,450 படுக்கைகள் அமைக் கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தினசரி பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் கூடுதல் சிறப்பு சிகிச்சை மையங்களை அமைக்கவும், சித்தா சிறப்பு சிகிச்சை மையங் களை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி எம்எஸ்டபுள்யு கட்டிடத்தில் 100 படுக்கை வசதியுடன் கூடிய சித்தா சிறப்பு சிகிச்சை மையமும், வாணியம்பாடி அடுத்த ஜெனதாபுரம் எஸ்எப்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்தா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை (தி.மலை), கதிர்ஆனந்த் (வேலூர்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பேசும்போது, ‘‘கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பொதுமக்களை கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க அரசும், அரசு அலுவலர் களும் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். அவர்களின் உழைப்பு வீணாகாமல் இருக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஆங்கில மருத்துவத்துடன், சித்தமருத்துவமும் கரோனா பெருந் தொற்றை கட்டுப்படுத்தி வருவ தால் தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சைக்காக சித்த மருத்துவ மனை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது கூடுதலாக 2 சித்தா மருத்துவமனைகள் தொடங் கப்பட்டுள்ளன.

கரோனா சித்தா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க இடமளித்த கல்வி நிறுவனங்களுக்கு எனது பாராட்டுக்கள். இந்த 2 சிகிச்சை மையங்களிலும் 200 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்), தேவராஜ் (ஜோலார்பேட்டை), சித்த மருத்துவர் விக்ரம்குமார், வேலூர் புற்றுமகரிஷி சித்த மருத்துவ மனை மருத்துவர் பாஸ்கரன், சித்த மருத்துவர் சக்திசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x