Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM
கரோனா நோயாளிகளுக்கு தொய்வின்றி சிகிச்சை வழங்க வேண்டுமென, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர்அதுல்ய மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் கரோனாபடுக்கைகள் நிரம்பி வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரதுறை சார்பில் பல்வேறு பகுதிகளில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிக்கண்ணா அரசு கலை கல்லூரி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி சாலையிலுள்ள தனியார் மண்டபம், சந்திரகாவி பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா படுக்கைகள் அமைக்கப்பட்டு, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா படுக்கைகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் முறை குறித்து சிக்கண்ணா கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குபணியில் இருந்த செவிலியர்கள்மற்றும் மருத்துவர்களிடம் அரசு வழிமுறைகளுடன் தொய்வின்றி தரமாக சிகிச்சை வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து, குமரன் கல்லூரியையும், காய்ச்சல் பரிசோதனை முகாம்களையும் ஆய்வு செய்தார். கரோனா படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். ஆக்சிஜன் படுக்கைகளும் இருக்க வேண்டும். ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருப்பூர் கோட்டாட்சியர் ஜெகநாதன், வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவ் கிருஷ்ணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT