Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM
கரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமென, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வரவேற்றார். செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.செல்வராஜ், எம்.எஸ்.எம்.ஆனந்தன், சி.மகேந்திரன், கே.என்.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
படுக்கை, ஆக்சிஜன் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி, முடிந்தவரை இன்னும் கூடுதல் ஈடுபாடு மற்றும் தியாக மனப்பான்மையோடு பணிபுரிய வேண்டும். ஊரக வளர்ச்சிதுறையின் கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் தடுப்பு மருந்து, பிளிச்சிங் பவுடர் தெளிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் சிலர் விலகி இருப்பதாக தெரிகிறது. அவர்கள்பணிக்கு திரும்புவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். சித்தமருத்துவம் மூலமாக தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதி என்பதால், திருப்பூர் மாநகரில் கரோனா தொற்றை தடுக்க மாநகராட்சி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
அமைச்சர் கயல்விழி பேசும்போது, "தாராபுரத்தில் கரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கைக்கேற்ப படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வாய்ப்பு இருந்தால் ஒப்பந்த அடிப்படையிலும் நியமனம் செய்ய வேண்டும்" என்றார்.
மருத்துவர்கள் இல்லை
மக்களவைத் தொகுதி உறுப்பினர் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் பேசும்போது, "கரோனா பரவலின் வேகத்துக்கு ஏற்ப, திருப்பூர் மருத்துவக் கல்லூரிமருத்துவமனையின் கட்டமைப்புஇல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் இல்லை. வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வேலம்பாளையம் மேல்நிலைப் பள்ளியில் படுக்கை வசதி ஏற்படுத்தலாம். தேவையான தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகள் மற்றும் தொற்றாளர்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் போதிய சுகாதாரம் பேணி காக்க வேண்டும். எரிசனம்பட்டியில் படுக்கை வசதி உள்ளது. ஆனால் மருத்துவர்கள் இல்லை" என்றனர்.
எச்சரிக்கை
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது, "திருப்பூர்மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்குள் 5,617 பேர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றாளர்களின் இறப்பு எண்ணிக்கை குறைவுதான். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு, இறுதி கட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். இதுதொடர்பாக மூன்று மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் களையப்படும். இந்த நேரத்தில் பொருளாதாரத்தை சுரண்டும் வகையில்,தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிப்பது தவறானது.தனியார் மருத்துவமனைகளில் உரிய ஆவணங்களுடன் அரசுகாப்பீடு திட்ட அட்டை வைக்கப்பட்டிருந்து, அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்றுக்குகடந்த 4 நாட்களில் 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT