Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM
தனியார் கட்ட்ணப் பள்ளிகளை இலவசப் பொதுப் பள்ளிகளாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி, திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சமூகப் பாகுபாடுகளை ஒழித்து சமத்துவத்தை வளர்ப்பதில் பள்ளிகளுக்கு முதன்மை பங்குண்டு. பல்வேறு சாதிகளாகப் பிரிந்து வாழ்ந்த மக்களை, முதன்முதலாக ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் அமர்வதை அரசுப் பள்ளிகள்தான் சாத்தியமாக்கின. அரசுப் பள்ளிகள் மூலமாக சமத்துவம் சாத்தியமானது. சமத்துவப் பள்ளிகளாக இருந்த அரசுப் பள்ளிகள் இன்று அடித்தட்டுப் பிள்ளைகளின் பள்ளிகளாக மாறியுள்ளன. வசதி உள்ளவர்களின் பிள்ளைகள் தனியார் கட்டணப் பள்ளிகளில் படிக்கின்றனர். மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வால் சமூக நீதிக்கு கேடு விளைவதைப் பெரிதாகப் பேசுகிறோம். ஆனால், கல்வியை வியாபாரிகளிடம் ஒப்படைத்ததால், மழலையர் கல்வி தொடங்கி ஒட்டுமொத்தக் கல்வியிலும் சமூக நீதி ஒழிந்துவிட்டதைப் பேசத் தவறுகிறோம்.
கல்வி உரிமைச் சட்டம் - 2009 மூலமாக தனியார் கட்டணப் பள்ளிகளில் 25 சதவீதம் அளவுக்கு நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரை சேர்த்து, அரசின் கட்டணத்தில் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, கடந்த ஆண்டில் தமிழக அரசு சட்டம் இயற்றியது. இச்சட்டங்கள் மூலமாக கல்வி வழங்குவதில் சமமற்ற நிலை நீடிப்பதையும், ஏழைகளுக்கு சமூக அநீதி இழைக்கப்படுவதையும் முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாது.
பல்வேறு வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் அருகமைப் பள்ளி அமைப்பிலான பொதுப்பள்ளி முறையை தமிழகத்திலும் உருவாக்க வேண்டும். தனியார் அறக்கட்டளை முதலீட்டில் நிறுவப்பட்டு, பெற்றோர்களின் கல்விக் கட்டண நிதியில் இயங்கும் தனியார் பள்ளிகளை அரசு நிதியில் இயங்கும் கட்டணம் இல்லா பள்ளிகளாக மாற்றி அமைப்பதன் மூலமாக, தமிழகத்திலுலம் பொதுப்பள்ளி முறையை சாத்தியமாக்க முடியும். இதற்கான சட்டத்தை இயற்றுவதற்கான வழிமுறைகளை ஆராய, தமிழக அரசு உடனடியாக கல்வி வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT