Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM
கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பணியை நேற்று தொடங்கினர்.
கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும், அதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் மே மாதமே வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. 10 லட்சத்து 25 ஆயிரத்து 103 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி பெற்றுவரும் 51 ஆயிரத்து 103 குடும்ப அட்டைதாரர்கள் உட்பட 9 லட்சத்து 82 ஆயிரத்து 833 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக, மாவட்ட கூட்டுறவுத் துறைக்கு ரூ.198 கோடியே 56 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் ரேஷன் கடை ஊழியர்கள், வீடு வீடாக சென்று நேற்று முதல் டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட வழங்கல் துறை அலுவலர்கள் கூறும்போது, ‘‘எந்த தேதியில் வந்து நிவாரணத் தொகை பெற வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 200 பேருக்கு டோக்கன் வழங்கப்படும். டோக்கன் விநியோகிக்கச் செல்லும்போது ரேஷன் கடை ஊழியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி முதல் நிவாரணத் தொகை வழங்கப்படும்’’ என்றனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கூறும்போது, "கரோனா நிவாரணத் தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் நேற்று முதல் வரும் 13-ம் தேதி வரை வீடு, வீடாக சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மூலமாக டோக்கன் வழங்கப்படும். குடும்ப அட்டை இல்லாதவர்கள், மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்டவர்கள் POS device மூலமாக நிவாரண உதவித்தொகை பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து புகார்கள் ஏதும் இருப்பின், அதனை தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 0421-2971116 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.
உதகை
நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘நீலகிரி மாவட்டத்திலுள்ள 2 லட்சத்து 16 ஆயிரத்து 085 குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 15-ம் தேதிமுதல் தலா ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் வரும் 12-ம் தேதி வரை வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளுக்கு கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT