Published : 11 May 2021 03:12 AM
Last Updated : 11 May 2021 03:12 AM
ரேஷன் கடை விற்பனையாளர்கள் கட்டாயம் 2 முகக்கவசம் அணிந்து கரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நிவாரணம் முதல் தவணை தொகை ரூ.2 ஆயிரம் வழங்குவது தொடர்பாக நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் அண்ணாதுரை கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் 1,254 ரேஷன் கடைகள் மூலமாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 5 லட்சத்து 87 ஆயிரத்து 850 பேர் பயனடைவார்கள்.இந்த தொகை வரும் 15-ம் தேதி முதல் வழங்கப்படும்.
3 நாட்களில் முடிக்க வேண்டும்
ரேஷன் கடைகளை காலை 8 மணிக்கு திறந்து நிவாரண நிதி வழங்கும் பணியை தொடங்க வேண்டும். பிற்பகல் 12 மணியை கடந்து நிவாரண நிதி வழங்கக் கூடாது. 500 ரூபாய் நோட்டுகளாக அல்லது 2 ஆயிரம் ரூபாய் நோட்டாக வழங்கலாம். காலை 8 மணிக்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு தேவையான தொகை வழங்கப்படும்.
கண்டிப்பாக சமூக விலகலை பின்பற்ற வேண்டும்.ஒவ்வொரு நாளும் எந்த தெரு மக்களுக்கு வழங்கப்படுகிறது என்ற விவரத்தை அனைத்து ரேஷன் கடைகளிலும் தகவல் பலகையில் எழுத வேண்டும். கரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ரேஷன் கடை விற்பனையாளர்கள் கட்டாயம் 2 முகக்கவசம்ள் அணிந்து பணியை மேற்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கும் பாதுகாப்பு, நிவாரண நிதி பெற வரும் மக்களுக்கும் பாதுகாப்பு. ஒவ்வொரு ரேஷன் கடை முன்பும் மக்கள் பயன்பாட்டுக்காக கட்டாயம் சானிடைசர் திரவம் வைத்திருக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்., மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) பெருமாள், துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT