Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM
கரோனா தொற்றின் 2-ம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் இன்று முதல் (மே 10) வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட கடை வீதிகள், சந்தைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இருப்பினும் ஊரடங்கு நாட்களில் காலை 6 முதல் பகல் 12 மணி வரை காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் மற்றும் பால் விற்பனை மையங்கள் திறந்திருக்கும் என அரசு அறிவித்துள்ளது. ஊரடங்குக்கு மக்கள் தயாராகும் வகையில் கடந்த இரண்டு நாட்கள் காலை முதல் இரவு வரை காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் அரசு அனுமதி அளித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டதால், திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே வடக்கு உழவர் சந்தை, திருப்பூர் - பல்லடம் சாலை தென்னம்பாளையம் சந்தைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனர். சந்தைக்கு வெளியே ஆங்காங்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சந்தைக்கு வந்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாநகரில் அரிசிக்கடை வீதி உட்பட முக்கிய வீதிகளில் மளிகை, பலசரக்கு மற்றும் அரிசி கடைகளில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், வெள்ளகோவில், பல்லடம், காரணம்பேட்டை, தெக்கலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் 200-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்கிச் செல்ல மக்கள் திரண்டதால் கடை ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கோவை
கோவை டவுன்ஹால், ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை கடைகள், காந்திபுரம், தியாகி குமரன் மார்க்கெட், சிங்காநல்லூர் உழவர் சந்தை, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் நேற்று காய்கறிகள், மளிகைப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.மேலும், இறைச்சிக் கடைகள், மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. வைகாசி மாதம் சுப நிகழ்வுகள் மற்றும் ரம்ஜானை முன்னிட்டு துணிக் கடைகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடினர்.
உதகை
சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டதால் நகராட்சி சந்தை, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, மணிக்கூண்டு, எட்டின்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT