Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM
திருப்பூர், கோவை மாவட்டங்களில் பிரதான பயிராக விளங்கும் தென்னையை தாக்கும் பூச்சிகளில்அதிக சேதத்தை விளைவிப்பதுசிவப்புக் கூன் வண்டு. மேலும், குருத்தழுகல், இலை அழுகல் மற்றும் காண்டாமிருக வண்டு தாக்கிய இளம் தென்னை மரங்களை சிவப்பு கூன் வண்டு அதிகம் தாக்குகிறது. இதனால், இரண்டு மாவட்ட விவசாயிகளும் கடும் இழப்பை சந்திக்கின்றனர் என்கின்றனர் விவசாயிகள்.
முறியும் மரம்
இதுதொடர்பாக தமிழ்நாடுவேளாண்மை பல்கலைக்கழகத்தின் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி பி.ஜி.கவிதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ந.ஆனந்தராஜா ஆகியோர் கூறும்போது, "மரத்தின் ஓட்டைகள் மற்றும் அதன் வழியே திசுக்களைத் தின்றபின் வெளியே தள்ளப்பட்ட மரநாறுகளும் காணப்படும். புழுக்கள் உட்சென்ற சிறிய துவாரத்தின் வழியே சிவப்பு நீர் வடிந்து காய்ந்த பிசின் காணப்படும். பலமற்ற நிலையில் இருக்கும் மரத்தின் கொண்டைப் பகுதி எளிதாக முறிந்துவிழும். மரத்தின் தண்டுப் பகுதியில் கூர்ந்து கவனித்தால், புழுக்கள் இரையும் சத்தம் கேட்கும். நீள்வட்ட வடிவம், வெள்ளை நிறத்தில் முட்டை காணப்படும். துளைக்கப்பட்ட துவாரங்கள், காயம்பட்ட மற்றும் தண்டின் தாக்கப்பட்ட இடுக்குகளில் முட்டைகள் இருக்கும். லேசான மஞ்சள் நிறத்துடன் புழு இருக்கும். இதற்குக்கு கால்கள் கிடையாது.மரங்களின் நுனிப் பகுதியை தேவையான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும். அருகில் இருக்கும் மற்ற மரங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, வண்டு தாக்கிய மரங்களை வெட்டி அழிக்க வேண்டும். தண்டு பாகத்தில் உள்ள ஓலைகளை முழுவதும் வெட்டுவதால், வண்டுகள் முட்டையிட எளிதாகிறது. இதைத் தடுக்க பச்சை ஓலைகளை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் தண்டில் இருந்து 120 செ.மீ. விட்டு, பின் ஓலைகளை நறுக்குவதால் புழுக்கள் எளிதில் துளையிட்டு உட்செல்வதை தடுக்கலாம்.
ராசயன முறை: பாதிக்கப்பட்ட மரங்களில் இருக்கும் துளைகளை கவனித்து, மேலே இருக்கும் துளையைத் தவிர மற்றவைகளை அடைக்க வேண்டும். இத்துளை வழியே புனல் மூலமாக ஒரு சதவீதம் கார்போரைல், 0.2 சதவீதம் டிரை குளோர்பான் மரம் ஒன்றுக்கு 1 லிட்டர் வீதம் ஊற்றி துளையை அடைக்க வேண்டும். தேவைப்படின் ஒருவாரம் கழித்து மீண்டும் ஒருமுறை செய்யவும். கொண்டைப் பகுதியில் தாக்குதல் இருப்பின் ஓலைகளை சுத்தம் செய்து, பூச்சிக்கொல்லி கரைசலை ஊற்ற வேண்டும்.
தண்டில் துளைகள் இருப்பின், அவற்றை தார் அல்லது சிமென்ட் பூச்சு மூலமாக அடைத்துவிட வேண்டும். அதிகம் பாதிக்கப்பட்ட மரங்களில் 36 எஸ்.எல்.மருந்தை 100 மி.லி. தண்ணீருடன் கலந்து 45 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை செலுத்த வேண்டும். வேர் மூலமாக மருந்து செலுத்துவதற்கு முன் காய்களை அறுவடை செய்ய வேண்டும்.
மருந்து செலுத்திய பிறகு 45 நாட்களுக்கு பிறகு காய்களை அறுவடை செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு ஒரு பிரமோன் பொறி அமைக்கலாம். மேலும், விவரங்களுக்கு பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT