Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் கடைகள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடின.
கரோனா தொற்று பரவல் தீவிர மடைந்துள்ளதால், தமிழக அரசு அறிவித்துள்ள 15 நாட்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தி.மலை மாவட்டத்தில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் தேநீர் கடைகளை தவிர்த்து இதர கடைகள் மூடப்பட்டன. மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் மற்றும் பால் விற்பனை ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டன.
கடைகள் மூடப்பட்டதால் திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யாறு, செங்கம், போளூர், கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு, தண்டராம்பட்டு, வெம்பாக்கம், கலசப்பாக்கம், வேட்டவலம் மற்றும் ஜமுனா மரத்தூர் ஆகிய வட்டங்களில் பரபரப்பாக காணப்படும் வர்த்தக வீதிகள் வெறிச்சோடின. அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைகளை மூடுமாறு காவல் துறையினர் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதே நேரத்தில் உத்தரவை பின்பற்றாத கடை களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் திறக்கப்பட் டிருந்த மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் தேநீர் கடைகளும், அரசு உத்தரவின்படி பகல் 12 மணிக்கு மூடப்பட்டன. 12 மணிக்கு பிறகும் திறந்திருந்த கடைகளை, ரோந்து சென்ற காவல் துறையினர் கடைகளை அடைக்குமாறு அறிவுறுத்தினர். பகல் 12 மணி வரை மட்டுமே அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்க வேண்டும் என்ற உத்தரவால், அக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால், கடைகள் திறக்கப்படும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மளிகைக்கடைகள் உள்ளிட்டகடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் போது, மதுபானக்கடைகள் மட்டும் கட்டுப்பாடுகள் இல்லாமல் செயல்படுவது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் அனைத்தும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள சுமார் 300 டாஸ்மாக் மதுபானக்கடைகள் நேற்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன. கடை திறப்பதற்கு முன்பாகவே, மதுப்பிரியர்கள் வரிசையில் காத்திருந்து மதுபான பாட்டில்களை வாங்கிச் சென்றனர். மேலும், கடை மூடப்படும் நேரம் நெருங்கியதும், முண்டியடித்து மதுபான பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
புதிய கட்டுப்பாடுகள் காரணமாக கடைகள் மூடப்பட்டதால், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. அரசு அறிவித்துள்ள 50 சதவீத இருக்கைகளுக்கும் குறைவாகவே, பேருந்துகள் இயக்கப்பட்டன. பணிக்கு செல்பவர்கள் மட்டுமே பேருந்து பயணத்தை பயன்படுத்தினர். பயணிகள் குறைவாக இருந்ததால், தனியார் பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டது. ஏற்கெனவே டீசல் விலை உயர்வால், நஷ்டத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளுக்கு புதிய கட்டுப் பாடுகள் என்பது பாதிப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்று பரவலை தடுக்க 50 சதவீத ஊழியர்களை கொண்டு அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அறிவுறுத் தப்பட்டது. இதனால், வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவல கங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள், ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து துறை அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கியது. இதனால் மக்கள் பணி பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT