Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

யுனிவர்சல் திரையரங்கப் பகுதியிலுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தால் - நிரந்தர குப்பைத்தொட்டியாக மாறும் நொய்யலாறு : காத்திருக்கும் பயணிகள் கழிவுகளை வீசிச் செல்வதாக புகார்

திருப்பூர்

தற்காலிக பேருந்து நிலையத்தால் நிரந்த குப்பைத் தொட்டியாக திருப்பூர் நொய்யலாறு பகுதி மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சுமார்35 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டில் இருந்த திருப்பூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, தற்போது ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து, மக்கள் பயன்பாட்டுக்காக கோவில்வழி, பழைய பேருந்து நிலையத்தின் வெளிப்புறம் மற்றும் யுனிவர்சல் திரையரங்க பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படுகின்றன. திருப்பூர் வளர்மதி பாலத்தை ஒட்டிய யுனிவர்சல் திரையங்க பகுதியிலுள்ள தற்காலிக பேருந்துநிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, தாராபுரம் சாலை கோவில்வழி, பழைய பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்து நிலையம், கடந்த10 மாதங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், பேருந்துக்கு வரும் பொதுமக்கள் நொய்யலாற்றில் குப்பை கொட்டுவதால் நீர் நிலை பாதிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சே.பாலசுப்பிரமணியம் கூறும்போது, "திருப்பூர் நொய்யலாறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுத்தம் செய்யப்பட்டது. ஆனால், அதில் தற்போது ஆள் உயரத்தைக் கடந்து செடி முளைத்து நீர் வழித்தடம் என்பதற்கான அடையாளத்தை இழந்து நிற்கிறது. அதேபோல, தற்காலிக பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் நொய்யல் ஆற்றை ஒட்டிய பகுதியில் தின்பண்டங்களின் பாலித்தீன் பைகள், தேநீர் குவளைகள், பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள் மற்றும் உணவு பொட்டலங்களை வீசிச் செல்வதால், நொய்யலாறு நாள்தோறும் மாசுபட்டு வருகிறது.

ஏற்கெனவே சாய ஆலைகளால்திருப்பூரின் நிலத்தடி நீர் மட்டம்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நொய்யலாறும் குப்பைத் தொட்டியாகி வருவது வேதனை அளிக்கிறது. இதனை மாநகராட்சி அலுவலர்களும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகள் முடிவடைவதற்குள், வளர்மதி பாலத்தின் நொய்யலாறு முழு குப்பைத் தொட்டியாக மாறிவிடும்" என்றார்.

அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறும்போது, "நொய்யலாற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், திறந்தவெளியாக நொய்யலாறு இருப்பதால், மக்கள் தாங்கள் பயன்படுத்திய பொருட்களை அதில் வீசிச் செல்கின்றனர். குடிநீர் மற்றும் குப்பைத்தொட்டி உள்ளிடவை மக்களின் பார்வைபடும்படி வைக்கப்பட்டிருந்தால், நொய்யலாறு மாசுபடுவது தடுக்கப்படும். அதிகாலை நேரங்களில் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தும் பலர், நொய்யலாற்று கரையின் இருமருங்கிலும் இயற்கை உபாதை கழிக்க பயன்படுத்தி, சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர். இதனை மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார் ‘இந்து தமிழ் திசை செய்தியாளரிடம்’ கூறும்போது, "வளர்மதி நொய்யலாற்றங்கரையில் பணிகள் நிலுவையில் உள்ளன. நொய்யலாற்றுக்குள் பேருந்துக்கு வரும் பயணிகள் குப்பை கொட்டுவதை தடுக்க, மாநகராட்சி உதவி ஆணையர் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.திருப்பூர் யுனிவர்சல் திரையரங்கப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளால் வீசப்பட்டு, நொய்யலாற்றில் தேங்கிக் கிடக்கும் குப்பை. படம்: இரா.கார்த்திகேயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x