Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் கம்பு சாகுபடி செய்து அதிக மகசூல் பெற எளிய வழிமுறைகளை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட வேளாண் இணை இயக்கு நர் ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சிறு தானிய பயிர்களில் மிகவும் முக்கியமான சத்து வாய்ந்தது கம்பு பயிராகும். கம்பு குறைந்த நீர்வளம், மண்வளம் உள்ள இடங்களில் செழித்து வளரக்கூடிய தன்மை கொண்டது. அதுமட்டுமின்றி கம்பு குறுகியகால பயிராகும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதியுள்ள விவசாயி கள் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சுமார் 1,250 ஏக்கர் பரப்பில் கம்பு சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, சித்திரை மாதம் தொடங்கியுள்ளதால் நீர்ப் பாசனம் வசதியுள்ள விவசாயிகள் கம்பு சாகுபடியை தொடங்கலாம். ஓர் ஏக்கருக்கு 2 கிலோ கம்பு போதுமானதாகும்.
ஓர் ஏக்கர் நடவு செய்ய 3 சென்ட் நாற்றங்கால் தேவை. கிணற்றுக்கு அருகில் நல்ல வடிகால் வசதியுடன் கூடிய இடத்தில் 300 கிலோ மக்கிய தொழு உரமிட்டு உழவு செய்து நன்றாக மண்ணில் கலக்க வேண்டும். 3 மீட்டருக்கு ஒன்றரை மீட்டர் அளவு உள்ள பாத்திகள் அமைத்து 2 பாத்திகளுக்கு இடையில் 30 செ.மீ., அகலம் வாய்க்கால் அமைக்கலாம். நாற்றங்காலில் 250 கிராம் கார்போ பியூரான் 3 ஜி குருணை மருந்தை சீராக தூவலாம். இதன் மூலம் தண்டு ஈ தாக்குதலில் இருந்து நாற்று பாதுகாக்கப்படும்.
அதன்பிறகு 1 செ.மீ., ஆழத்துக்கு விதைகளை விதைக்க வேண்டும். அதன்பிறகு மண் மற்றும் மக்கிய தொழு உரத்தை கொண்டு சீராக தூவி விதைகளை மூட வேண்டும். மேலும், நடவு வயலை 2 அல்லது 3 முறை உழவு செய்ய வேண்டும். உழவின் போது 5 டன் மக்கிய தொழு உரம் மற்றும் 4 பாக்கெட் அசோஸ்பைரிலாம் மற்றும் பாஸ்போபாக்டீரியா 4 பாக்கெட் கலந்து உயிர் உரங்கள் இட்டு மண்ணில் நன்று கலக்கி விட வேண்டும்.
ரசாயன உரங்களை மண் ஆய்வு செய்து பயன்படுத்த வேண்டும். மண் பரிசோதனை செய்யாத நிலையில் பொதுவான உர பரிந்துரைகளை பின்பற்றி ரசாயன உரங்களான யூரியா, டி.ஏ.பிமற்றும் பொட்டாஷியம் உரங்களை 1 ஏக்கருக்கு 59:30:23 கிலோ என்ற அளவில் இட வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட யூரியாவில் 25 சதவீதம் டி.ஏ.பி 100 சதவீதம் பொட்டாஷியம் அடியுரமாக இட்டு பிறகு 50 சதவீதம் யூரியாவை நடவு செய்த 30 நாட்கள் கழித்து 2-ம் மேலுரமாக இட வேண்டும். இரும்புச்சத்து, போரான், தாமிரம் போன்ற சத்துப்பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க ஓர் ஏக்கருக்கு 5 கிலோ சிறுதானிய நுண்ணூட்டக் கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து வயலின் சீராக தூவ வேண்டும்.
குருத்து, ஈ, தண்டுதுளைப்பான், கதிர்நாவாய்ப்பூச்சி போன்ற பூச்சிகளை கட்டுப்படுத்த அசார்டி ராக்டின் 1 சதவீதம், 600 மி.லி., ஏக்கர் அல்லது மாலத்தியான் 5டி-10 கிலோ தெளிக்கலாம். அடிச்சாம்பல் நோய், தேன் ஒழுகல் நோய், துருநோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த கார்பெண்டாசிம் 200 கிராம்/ஏக்கர் அல்லது மான்கோசெப் 400 கிராம் ஓர் ஏக்கரில் தெளிக்கலாம்.
இலைகள் மஞ்சள் நிறத்துக்கு மாறி உலர்ந்து தோற்றத்துக்கு வரும்போது தானியங்கள் கடினமாக இருக்கும். அப்போது, கதிர்களை அறுவடை செய்ய வேண்டும். ஏக்கருக்கு 1 டன் முதல் 1.250 டன் வரை மகசூல் கிடைக்கும்’’என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment