Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM
ஜவுளி விற்பனைக் கடைகள், வணிக நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அனுமதிக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தின்(சைமா) தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் நேற்று வெளியிட்டஅறிக்கையில், "கரோனா தொற்று பரவலால், கடந்தாண்டு திருப்பூரில் தொழில்நிறுவனங்களை 100 சதவீதம் முடக்கி, பொருளாதார சீர்குலைவை சந்தித்தோம். இந்தமுறை அரசு நன்கு யோசித்து தொழில் நிறுவனங்கள் இயக்கத்துக்கு தடை எதுவும் விதிக்கவில்லை. இருப்பினும், தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்கள் குறைவு, நேரக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. உற்பத்தியாகும் பின்னலாடைகளை விற்பனைசெய்யும் வணிக நிறுவனங்கள், பெரிய ஜவுளிக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் உற்பத்தி செய்யும் பின்னலாடைகள் விற்பனையாவதில்லை.
இதேபோல, மளிகைக் கடைகள், உணவகங்கள், வியாபார நிறுவனங்கள், சலூன்கள் முழுவதும் மூடப்படுவதால், தொடர்புடைய நபர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
தொழில் நிறுவனங்களை சுகாதாரக் கட்டுப்பாடுடன் இயங்கஏற்பாடு செய்ததுபோல, ஜவுளி, வணிக நிறுவனங்கள், உணவகங்கள், சலூன் கடைகளையும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கையுடன் இயங்க ஆட்சியர் அனுமதிக்கவேண்டும். கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.
முழுமையாக கடைகளை மூட உத்தரவிடும்போது, அவர்கள் அரசிடம் நிதி உதவி செய்ய வலியுறுத்துகிறார்கள். அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுத்துவதைவிட, கட்டுப்பாடுகளுடன் அனைத்துநிறுவனங்களையும் அனுமதிப்பதுதான் பொருளாதார ஸ்திர தன்மைக்கு நல்லது.
இதனால், பின்னலாடை மட்டுமின்றி உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களும் விற்பனையாவதுடன், பொருளாதாரம், பணப்புழக்கம் ஓரளவுக்கு பூர்த்தி ஆவதற்கும் வாய்ப்பு ஏற்படும். மேலும், பின்னலாடை நிறுவனங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள், அவர்களது குடும்பத்தினர், தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் சைமா சங்கம் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT