Published : 30 Apr 2021 03:14 AM
Last Updated : 30 Apr 2021 03:14 AM

கோழி இறைச்சி, முட்டைக் கடைகளுக்கு - முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை : கோழிப்பண்ணையாளர் சங்கம் வேண்டுகோள்

நாமக்கல்

ஞாயிறு ஊரடங்கில் இருந்து கோழி இறைச்சி மற்றும் முட்டைக் கடைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்,என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் மார்க் கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று பரவலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கறிக்கோழி மற்றும் முட்டை விற்பனை கடுமையாக சரிவடைந்து பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 6 மாதங்களுக்குப்பிறகு மீண்டும் கறிக்கோழி மற்றும் முட்டை விற்பனை உயரத்தொடங்கியது. தற்போது கரோனா 2-வது அலை பரவலால் முட்டை மற்றும் கோழி விற்பனை கடுமையாக சரிந்து விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.

கோழிப்பண்ணைத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு சுமார் 50 ஆயிரம் பண்ணையாளர்களும், 5 லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். வாரம் ஒன்றுக்கு சுமார் 2 கோடி கிலோ கறிக்கோழியும், 28 கோடி முட்டையும் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரிய ஓட்டல்கள், சுற்றுலா தலங்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள் போன்றவை மூடப்பட்டுள்ளதால் முட்டை மற்றும் கறிக்கோழி விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி இப்போது ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீவனம் விலை உயர்வால் கறிக்கோழி உற்பத்திசெலவு ஒரு கிலோவுக்கு ரூ. 100-க்கும் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த கறிக்கோழி உற்பத்தியில் 70 சதவீதம் தமிழகத்திலும், மீதம் உள்ள 30 சதவீதம் கேரள மாநிலத்திலும் விற்பனை செய்யப் படுகிறது.

பொதுமக்கள் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தான் அதிகமாக கறிக்கோழியை வாங்கி உண்பது வழக்கம். தற்போது ஞாயிறு ஊரடங்கால் அந்த விற்பனையும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. உயிர் சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் உடனடியாக உற்பத்தியை குறைக்க முடியாது, கோழிகளுக்கு தீவனம் அளிக்காமல் இருக்க முடியாது.

முட்டை பொறிக்கும் காலம், வளர்ப்பு பருவம் என சுமார் 65 நாட்களுக்குப்பிறகு தான் கோழி விற்பனை செய்ய முடியும். பண்ணைகளில் வளர்க்கும் கோழிகளை 42 நாட்களுக்கு மேல் வைத்திருந்தால் தற்போதுள்ள வெப்ப நிலையில் கோழிகள் இறக்க நேரிடும். எனவே தமிழக அரசு நலிவடைந்து வரும் கோழிப்பண்ணைத் தொழிலைக் காப்பாற்றும் வகையில், கர்நாடகா மாநிலத்தைப்போல் தமிழகத் திலும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோழி மற்றும் முட்டைக் கடைகள் திறந்து வைத்து விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x