Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் - செவிலியர்கள் தொடர் போராட்டம் : காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நோயாளிகளுக்கு பாதிப்பு இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்.

செங்கல்பட்டு

தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும்வகையில் செங்கல்பட்டு அரசுமருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 23 புறநோயாளி பிரிவுகள் செயல்படுகின்றன. இதில் 1,343 உள்நோயாளிகளுக்கு படுக்கைவசதிகள் உள்ளன. புற நோயாளிகளாக தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும் கரோனாபாதிக்கப்பட்டவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள்.

அரசு விதிப்படி இந்த மருத்துவமனையில் 1,100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி செய்ய வேண்டிய இடத்தில் 152செவிலியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். சுமார் 900 செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது.

கரோனா சிகிச்சைக்கு 500 செவிலியர்கள் தேவைப்படும் என்றநிலையில், தற்போது 35 செவிலியர்கள் மட்டுமே கரோனா சிகிச்சைக்காக பணியாற்றுகின்றனர். 465 செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. கரோனா காலத்தை கருத்தில் கொண்டு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 24-ம்தேதி முதல் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலைசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவிலியர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நோயாளிகளுக்கு பாதிப்பு இன்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எங்கள் போராட்டம் தொடரும் என செவிலியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x