Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இல்லாததால் முக்கிய சாலைகள், பஜார் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி காணப்பட்டன.
சந்தைகள், மார்க்கெட்டுகளில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்ததால், அவை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. எனினும், பெரும்புதூர் மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிய வாகனங்கள் மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்பட்டன.
100 பேருடன் திருமணம்
அத்தியாவசிய தேவைகளான மருத்துவம், பால், பத்திரிகை,ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.கோயில்கள், திருமண மண்டபங்களில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் 100பேருடன் நடைபெற அனுமதிக்கப்பட்டன.
மாவட்டத்தின் முக்கிய சாலைகளான ஜிஎஸ்டி சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வேளச்சேரி- தாம்பரம் சாலை ஆகியவை வாகன போக்குவரத்து இன்றி காணப்பட்டன.
மாவட்டத்தில் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சில பகுதிகளில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய சிலருக்கு போலீஸார் அபராதம் விதித்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
சுற்றுலாதலமான மாமல்லபுரத்தில், கலைச்சின்னங்கள் மற்றும்கடற்கரைக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டதால், மக்கள் நடமாட்டமின்றி அச்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வாகன சோதனை
திருவள்ளூர் மாவட்டத்தில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், மீன் மற்றும் காய்கறி சந்தைகள், உணவகங்கள், மளிகை கடைகள் என அனைத்தும் நேற்று மூடப்பட்டன.அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் வாகனங்களை தவிர, பெரும்பாலான வாகனங்களின் போக்குவரத்து இல்லாததால், நேற்று மாவட்டத்தில் உள்ள சென்னை-பெங்களூரு, சென்னை-கோல்கத்தா, சென்னை- திருப்பதி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள், செங்குன்றம்-திருவள்ளூர், பூந்தமல்லி- திருவள்ளூர், திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை உள்ளிட்டமுக்கிய சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின.
மாவட்ட காவல் துறையினரும், சென்னை பெருநகர காவல் துறையினரும் முக்கிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களில் பெரும்பாலோர்எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
பூந்தமல்லி டிரங்க் சாலையில் மூடப்பட்ட கடைகள் மற்றும் சாலைகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT