Published : 25 Apr 2021 06:09 AM
Last Updated : 25 Apr 2021 06:09 AM
தேர்தல் பணிகள் முடிவடைந்ததும் திருப்பூர் மாவட்டத்தில் உயர் மின்கோபுரத் திட்ட பணிகள் தொடங்கப்பட்டதற்கு விவசாயிகள் சங்கம் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் வெளியிட்ட அறிக்கையில், "விருதுநகர் முதல் திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையம் வரை 765 கிலோ வாட் உயர் மின்கோபுரம் திட்டப் பணியை தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் தொடங்கியவுடன், பாதிக்கப்பட்ட 4 மாவட்ட விவசாயிகள் இணைந்து இந்த திட்டத்தை சாலையோரம் கேபிளில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கொச்சியிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு 1100 கிலோ வாட் திட்டத்தை, மத்திய அரசு 3500 மீட்டர் தூரம் கேபிள் அமைத்து கொண்டு செல்கிறது. இதையடுத்து உயர் மின்கோபுர திட்டம் மற்றும் இந்திய தந்தி சட்டம் 1885-யை ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகளால் சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது தேர்தல் பணிகள் முடிந்தவுடன் தாராபுரம், குண்டடம் வட்டங்களிலும், விருதுநகர் மாவட்டத்திலும் திட்டப்பணிகளை தொடங்கியுள்ளதை, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 20-ம் தேதி தாராபுரம் வட்டம் சூரியநல்லூரில் தனியார் கார்ப்பரேட் நிறுவமனான சுஸ்லான், உயர் மின் கோபுரம் அமைக்க வந்தனர். நீதிமன்ற வழக்கை காரணம்காட்டி விவசாயிகள் தடுத்தனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் தனபால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம். அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT