Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM

வாக்கு எண்ணும் மையத்தில் 10 முதல் 20 மேஜைகள் அமைக்கப்படும் : மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா தகவல்

பட்டாபிராமில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில் உரையாற்றுகிறார் மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா.

திருவள்ளூர்

கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, வாக்கு எண்ணும் மையத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப 10 முதல் 20 மேஜைகள் அமைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

திருவள்ளுர் மாவட்டம், பட்டாபிராமில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், மாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் தபால் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் பா.பொன்னையா தலைமையில் நேற்று நடைபெற்றது.

அப்போது, பொன்னையா கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதியன்று காலை 8 மணிக்கு பெருமாள்பட்டு ஊராட்சியில் உள்ள ராம் வித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராம் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் எண்ணப்படும்.

இதில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப 10 முதல் 20 மேஜைகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் வாக்குகள் எண்ணும் மேற்பார்வையாளர் ஒருவர்,ஒரு வாக்குகள் எண்ணும் உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர்ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில், வாக்கு எண்ணும் பணிக்கான எழுதுப் பொருட்கள் மற்றும் பேனா, பென்சில், கால்குலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வைக்கப்படும்.

மேலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் தங்கள் கைபேசிகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது.

தபால் வாக்கைப் பொறுத்தவரையில் 500 வாக்குகளுக்கு ஒரு மேஜை வீதம் 4 முதல் 8 மேஜைகள் அமைக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா கூறினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் வெ.முத்துசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) அனமிகா ரமேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x