Published : 23 Apr 2021 03:16 AM
Last Updated : 23 Apr 2021 03:16 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தினசரி அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,891-ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 8 ஆயிரமாக இருந்த மொத்த பாதிப்பு 7 நாட்களில் ஆயிரத்தை நெருங்கி 9 ஆயிரத்தை எட்ட உள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தொற்று வேகமாக பரவி வந்தாலும் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத தால் அடுத்த சில நாட்களில் நோய் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித் துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 4 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளதால் இன்று முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித் துள்ளனர்.
762 பேருக்கு சிகிச்சை
திருப்பத்தூரைச் சேர்ந்த 60 வயதுள்ள ஆண் ஒருவர் கரோனா தொற்று காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 130-ஆக உயர்ந்துள்ளது.
கரோனா சிறப்பு வார்டுகள்
மாவட்டம் முழுவதும் 3,458 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளில் கரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.கரோனா பரவல் ஒரு பக்கம் அதிகரித்து வந்தாலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 37 பேர் குணமடைந்த நேற்று வீடு திரும்பினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நோய் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து பேருந்து நிலையம், ரயில் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித் தனர்.
மேலும், ஏலகிரி மலையில் உள்ள தங்கும் விடுதிகளை உடனடியாக மூட வேண்டும். அங்கு தங்கியுள்ள வெளியூர்களைச் சேர்ந்தவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT