Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM

நெல்லையில் 290 பேருக்கு புதிதாக தொற்று - தென்காசியில் ஒருவர், குமரியில் 3 பேர் கரோனாவால் மரணம் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் எஸ்.பி. அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் நேற்று மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

திருநெல்வேலி / தென்காசி/ நாகர்கோவில்/ தூத்துக்குடி

வேகமாகப் பரவும் கரோனாவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 3 பேரும், தென்காசி மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 290 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் 141 பேருக்கும், புறநகர் பகுதிகளில் 149 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:

அம்பாசமுத்திரம்- 6, மானூர்-17, நாங்குநேரி-9, பாளையங்கோட்டை- 35, பாப்பாகுடி- 10, ராதாபுரம்- 4, வள்ளியூர்- 48, சேரன்மகாதேவி- 12, களக்காடு- 8.

கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில் மட்டும் நேற்று 20 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,671 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,918 பேர் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெறுகிறார்கள்.

வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு தொற்று உறுதியானதையடுத்து நீதிமன்றம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளிப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.

ரூ.45 லட்சம் அபராதம் வசூல்

இதனிடையே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இதுவரை ரூ.45 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வுமையத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறப்புமுகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளது. மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1,750 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன’’ என்றார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 162 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,799 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 13 பேர் உட்பட இதுவரை 8,806 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 828 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 123 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,602 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் மக்களில் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். கன்னியாகுமரி மாவட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பிற மாவட்டங்களில் இருந்து தடுப்பூசி வரவழைக்கப்படுகிறது.

இரவு நேர ஊரடங்கு தொடங்கஉள்ள நிலையில் முகக்கவசம்அணியாமலும், கரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமலும் நடமாடுவோர் மீது போலீஸார், சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை5,04,127 பேருக்கு கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 671 பேர் சிகிச்சையில் உள்ளனர். மார்ச் மாதத்தில் மட்டும் கரோனாவால் 1,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை முதல்கட்ட தடுப்பூசி 78,683 பேருக்கும், இரண்டாம் கட்ட தடுப்பூசி 11,485 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத காரணங்களுக்காக இதுவரை மொத்தம் 37,097 பேருக்கு அபராதமாக ரூ.70 லட்சத்து 31 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் 288 பேருக்கு பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 288 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,823 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 80 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 16,725 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் தற்போது 1,953 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனாவுக்கு மொத்தம் 145 பேர் இறந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x