Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM
கர்நாடகாவில் சரக்கு கப்பல் மோதி மாயமான சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த மீனவரின் உடல் மீட்கப்பட்டு சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்த ஜாபர் என்பவரது விசைப் படகில் தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் உட்பட 14 பேர் கடந்த 14-ம் தேதி கர்நாடக மாநிலம், மங்களூரு கடற்கரையில் இருந்து 43 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் மீன்பிடித்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த சரக்குக் கப்பல் மீனவர்களின் படகில் மோதியதில் படகு நீரில் மூழ்கியது. அதில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர்.
பழனிவேல் அப்போது படகின் அருகே தத்தளித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனில்தாஸ் ஆகிய இருவரையும் கப்பல் ஊழியர்கள் மீட்டனர். மேலும் இந்திய கடலோர காவல் படையினர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் (38), அவரது மாமனார் மாணிக்தாசன்(60),மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் என 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட வேல்முருகன் கடந்த 15-ம் தேதி கன்னிராஜபுரத்துக்கு வந்து சேர்ந்தார். கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பழனிவேல், வேதமாணிக்கம், பாலமுருகன் உள்ளிட்ட மாயமான 9 மீனவர்கள் தேடப்பட்டு வந்தனர். நேற்று முன்தினம் பழனிவேல் உடல் மீட்கப்பட்டது. நேற்று சொந்த ஊரான கன்னிராஜபுரத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை துணை இயக்குநர் இளம்வழுதி, கடலாடி வட்டாட்சியர் சேகர் கலந்து கொண்டனர்.
மீனவர் பழனிவேலின் குடும்பத்தினருக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி, ஒன்றியச் செயலாளர்கள் முனியசாமி பாண்டியன், அந்தோணிராஜ், திமுக முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT