Published : 17 Apr 2021 03:14 AM
Last Updated : 17 Apr 2021 03:14 AM
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.நாளுக்கு நாள் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். தனியார் மருத்துவமனைகளிலும் சிலர் தடுப்பூசி போட்டு வருகின்றனர்
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, "கரோனா தடுப்பு பணியை எளிதாக்கும் வகையில், பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர். முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்று ஆட்சியர் கூறுகிறார். ஆனால், தற்போது விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், தடுப்பூசி போட செல்லும் பலர் திருப்பி அனுப்பப்படும் சூழலும் நிலவுகிறது. அவிநாசி, காங்கயம், தாயம்பாளையம், கரடிவாவி உட்பட பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்களால் தடுப்பூசியை போட்டுக்கொள்ள முடியவில்லை. தேர்தலுக்கு பிறகுகரோனா குறித்த அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்திருப்பதால், பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் தட்டுப்பாடும், பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த அசாதாரண நிலையை, சுகாதாரத் துறை விரைவில் சீராக்க வேண்டும்" என்றனர்.
கிராமங்களில் தேவை அதிகரிப்பு
இப்போது அனைத்தும் போடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லை. தேவையை குறிப்பிட்டு, மாநில சுகாதாரத் துறையிடம் கேட்டுள்ளோம். கரோனா தடுப்பூசிவந்ததும், மாவட்டத்தின் அனைத்துபகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்படும். குறிப்பாக கிராமங்களில் ஆரம்பத்தை காட்டிலும் தற்போது வரவேற்பு கிடைத்திருக்கிறது, கிராமப்புற பகுதிகளிலும் தடுப்பூசியின் தேவை அதிகரித்திருப்பது உண்மை. மாவட்டத்தில் நாளொன்றுக்கு 6000 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன" என்றார்.
உடுமலை
உடுமலை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 300பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அங்கு 3 நாட்களுக்கு முன்பு 1000 டோஸ் மட்டுமே இருப்புவைக்கப்பட்டிருந்தது. நேற்று மருத்துவமனைக்கு வந்த சிலர்,தடுப்பூசி இருப்பு இல்லையெனக் கூறி திருப்பி அனுப்பப்பட்டனர். அதேபோல தனியார் எலும்பு மூட்டுமருத்துவமனை உட்பட 3 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு சென்றவர்களும் மருந்து இல்லை என திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.உடுமலை அரசு மருத்துவமனை, நகர சுகாதார நிலையம்,எரிசனம்பட்டி, செல்லப்பம்பாளையம், வாளவாடி, பெரிசினம்பட்டி உள்ளிட்ட ஆரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக நேற்று ஒரு நாளில் சுமார் 1,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே இருப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் செந்தில்குமார் கூறும்போது, "கரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு நிலவுவது உண்மைதான். தொடக்கத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடையே தயக்கம் இருந்தது.தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி விநியோகிக்கப்படவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் தேவையான அளவு விநியோகிக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்" என்றார்.
உதகை
சுகாதாரத் துறை ஊழியர்கள் கூறும்போது, "மாவட்டத்தில் தடுப்பூசி இருப்பு முடிந்துவிட்டது. தேவைக்கேற்ப தடுப்பூசி மருந்து கோரப்பட்டுள்ளது. இன்று (ஏப்.16) மாலைக்குள் வந்துவிடும். நாளைமுதல் (ஏப்.17) மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT