Published : 17 Apr 2021 03:15 AM
Last Updated : 17 Apr 2021 03:15 AM

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம் :

பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது . திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர்கள் . படம் மு. லெட்சுமி அருண்.

திருநெல்வேலி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்

பிளஸ் 2 பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் செய்முறைத் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் திட்டமிட்டபடி திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது.

மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 119 மேல்நிலைப்பள்ளிகளில் இத்தேர்வு நடைபெறுகிறது. திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூர் கல்வி மாவட்டங்களில் இருந்து 16,614 மாணவ, மாணவிகள் இத் தேர்வை எழுதுகிறார்கள். மாற்றுப்பள்ளிகளை சேர்ந்த முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். வரும் 24-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. கரோனா பரவலால் பகுதி, பகுதியாக தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வுக்கு வந்த மாணவ, மாணவிகள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே தேர்வுமையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நேற்று காலை 9 மணிக்கு தேர்வுகள் தொடங்கின.

மாணவ, மாணவியர் ஒவ்வொரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, உள்ளே அனுப்பப்பட்டனர். இயற்பியல், உயிரியல், கணினி அறிவியல் பிரிவுகளுக்கான செய்முறைத் தேர்வுகள் நேற்று நடைபெற்றன.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்த கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளின் படி தேர்வுக்கு வந்த அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. முகக்கவசம் அணிந்து, கைகளை சுத்தம் செய்த பிறகே தேர்வு எழுத தொடங்கினர். மிகவும் எளிமையான முறையிலேயே செய்முறைத் தேர்வுகள் இருந்ததால் மாணவ, மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி மற்றும் விபத்தில் சிக்கி காலில் காயமடைந்த ஒரு மாணவி ஆகிய இருவர் மட்டுமே செய்முறைத் தேர்வில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தேர்வு வரும் 23-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்

குமரி மாவட்டத்தில் 22,495 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். செய்முறை தேர்வு 184 மையங்களில் நடைபெற்றது. மாணவ, மாணவியர் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். பள்ளி வாயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப நிலைபரிசோதனை செய்யப்பட்டது. கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது. செய்முறை தேர்வு வருகிற 26-ம் தேதிமுடிவடைகிறது. தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபிர் தலைமையில் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x