Published : 13 Apr 2021 03:14 AM
Last Updated : 13 Apr 2021 03:14 AM

முகக்கவசத்தோடு வருவோருக்கு மட்டுமே அனுமதி : கடைகளில் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவு

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவை ஆட்சியர் சமீரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் வருவாய்மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கரோனா வைரஸ்பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சமீரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனுஜார்ஜ் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேசும்போது, “முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம்பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறுவோருக்கு உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும். கரோன கட்டுப்பாட்டு மையங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என கடைகளில் அறிவிப்பு பதாகை வைக்க வேண்டும். கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மருத்துவத்துறையுடன் இணைந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

பின்னர் தென்காசி எல்லைப் பகுதியான புளியரையில் உள்ள சோதனைச்சாவடி, தென்காசி அரசு தலைமை மருத்துவமனை, பாவூர்சத்திரம் ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி முகாம், ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் இயங்கி வரும் கரோனா பராமரிப்பு மையத்தை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் , மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் அருணா கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x