Published : 13 Apr 2021 03:14 AM
Last Updated : 13 Apr 2021 03:14 AM
திருநெல்வேலி/ தென்காசி/ நாகர்கோவில்/ தூத்துக்குடி
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 2 பேர் மரணம் அடைந்தனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளபரிசோதனைக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 435 பேரின் கரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி 47 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுபோல் பல்வேறுதனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 43 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
பாதிக்கப்பட்டுள்ளவர்களில் திருநெல்வேலி மாநகர பகுதியைச் சேர்ந்தவர்கள் 57 பேர். சமாதானபுரம் அருள்மணி தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்குபாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து,மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அந்த தெருவுக்கு சீல் வைத்துகிருமிநாசினி தெளித்தனர். பாளையங்கோட்டை வட்டாரத்தில் 14 பேர், நாங்குநேரி வட்டாரத்தில் 7 பேர், வள்ளியூர் வட்டாரத்தில் 6 பேர், ராதாபுரத்தில் 3 பேர்,மானூர், சேரன்மகாதேவி, களக்காடு வட்டாரத்தில் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
திருநெல்வேலியில் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்2 மாதிரி பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு அரசு பள்ளியில் மாணவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், உடனடியாக அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
2 பேர் மரணம்
திருநெல்வேலி மாவட்டம் வடக்கு பெட்டைகுளம் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர், திருநெல்வேலி புரத்தைச் சேர்ந்த 56 வயது ஆண் ஆகியோர் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களது உடல்களை உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்களின்படி திருநெல்வேலி புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ தலைவர் பீர்மஸ்தான் தலைமையிலான தன்னார்வ குழுவினர் அடக்கம் செய்தனர்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 75 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தொழிலாளர்களுக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. ராணித்தோட்டம் அரசு பணிமனையில் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.நாகர்கோவில் மாநகராட்சி நகர்நல அலுவலர் கின்சால் கூறும்போது, “ நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் இதுவரை 16,500 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10,900 பேர்” என்றார்.
நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அரங்கத்தில் படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அஞ்சுகிராமத்தை அடுத்துள்ள வாரியூரைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் கரோனா தொற்று ஏற்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.
தென்காசி
கரோனா பாதித்த முதியவர் தற்கொலை
திருநெல்வேலி மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியைச் சேர்ந்த 73 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மனமுடைந்த அந்த முதியவர் விஷம் குடித்ததாக தெரிகிறது. மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT