Published : 12 Apr 2021 03:20 AM
Last Updated : 12 Apr 2021 03:20 AM
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில், ரயில்வே பீடர் சாலையைச் சேர்ந்தவர் கருணா (60). ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு சங்கரன்கோவில் சங்குபுரம் பகுதியில் உள்ள பழைய வீட்டை வாங்க விலை பேசியுள்ளார். அந்த வீட்டை 15 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி, முன் பணமாக திருவேங்கடம் சாலையைச் சேர்ந்த கணபதி என்பவரது மனைவி சுப்புலெட்சுமியிடம் ரூ.3 லட்சம் தர சம்மதித்துள்ளார்.
அந்த வீட்டில் தனது உறவினர் 3 ஆண்டுகள் வசிப்பார் என்றும், அதன் பின்னர் வீட்டை எழுதித் தருவதாகவும் சுப்புலெட்சுமி கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட கருணா, ரூ.3 லட்சம் முன் தொகை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், 3 ஆண்டுகள் கழித்து கேட்டதற்கு, சுப்புலெட்சுமி சரிவர பதில் கூறவில்லை. மேலும் தற்போது பணத்தை திருப்பி தர முடியாது என்றும் அதற்கு பதிலாக வீட்டை அடமானமாக எழுதி தருவதாகவும் கூறியுள்ளார். அதன்படி, மேலநீலிதநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வீட்டை அடமானமாக எழுதிக் கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அந்த வீட்டின் சர்வே எண்ணை வைத்து ஆய்வு செய்து பார்த்தபோது, அந்த வீடு வேறு ஒருவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கருணா பலமுறை கேட்டும் பணத்தை அவர் திருப்பித் தரவில்லை. இதையடுத்து சுப்புலட்சுமி, அவரது மகன் மணிகண்டன் (30), மகள் இந்துமதி ஆகியோர் மீது சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்தில் கருணா புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT