Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

பயிற்சி மருத்துவர் பணிகளை செவிலியர்கள் செய்ய வேண்டும் : செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் வற்புறுத்துவதாக புகார்

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களின் பணிகளை செவிலியர்கள் செய்ய வேண்டும் என கல்லூரி முதல்வர் வற்புறுத்துவதாக செவிலியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களின் பயிற்சி காலம் முடிவடைந்து விட்டதால் புதிய பயிற்சி மருத்துவர்கள் வரும்வரை அவர்கள் செய்த அனைத்து பணிகளையும் தற்போது உள்ள செவிலியர்கள் மேற்கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் முத்துக்குமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செவிலியர்களை வற்புறுத்தி கையெழுத்து பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு, செவிலியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடைபெறும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செவிலியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து செவிலியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 1,000 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 132 பணியாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள். தினமும் அதிக எண்ணிக்கையில் மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு மருத்துவர்கள் யாரும் சரிவர பணிகளை செய்வதில்லை. மருத்துவமனை நிர்வாகம் அனைவருக்கும் பொதுவாக நடந்துகொள்ளாமல், ஒருதலைபட்சமாக மருத்துவர்களுக்கு மட்டும் சாதகமாக நடந்துகொள்கின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட முதுநிலை மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பயின்று வரும் நிலையில் அவர்களை, எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளவிடாமல் அனைத்து பணிகளும் செவிலியர்கள் மேல் திணிக்கப்படுவதால் செவிலியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. இதனால் அவர்களின் பணியும் பாதிக்கப்படுகிறது.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக நிர்வாகம் இதுபோன்ற சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. செவிலியர்களை அடிமைத்தனமாக நடத்தும் வகையில் இந்த சுற்றறிக்கை அமைந்துள்ளது. நோயாளிகளின் நலன் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்களுக்கும் நேரம் காலம் பாராமல் பணியாற்றி வருகிறோம். செவிலியர்களை மிரட்டும் வகையில் இந்த சுற்றறிக்கை அமைந்துள்ளது. எனவே அரசு இதில் தலையிட்டு உரிய தீர்வு காணவேண்டும் என்றனர்.

இதுகுறித்து முதல்வர் முத்துக்குமார் கூறியதாவது: ஏற்கெனவே பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களின் பணிக்காலம் முடித்துவிட்டது. மே 15-ம் தேதிக்கு பிறகு புதிய பயிற்சி மருத்துவர்கள் பணியாற்ற வருவார்கள். அதுவரை, செவிலியர்கள் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். அதற்காகவே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

யாரையும் தண்டிக்கும் நோக்கிலும், மிரட்டும் நோக்கிலும் இந்த சுற்றறிக்கையை அனுப்பவில்லை. பயிற்சி மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இது தற்காலிகமானதுதான். நோயாளிகளின் நலன் கருதியும் தற்போது கரோனா தொற்று காரணமாகவும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றார்.

யாரையும் தண்டிக்கும் நோக்கிலும், மிரட்டும் நோக்கிலும் இந்த சுற்றறிக்கையை அனுப்பவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x