Published : 11 Apr 2021 03:17 AM
Last Updated : 11 Apr 2021 03:17 AM
கரோனா தடுப்பூசி போட 50 நபர்களுக்கு மேல் பதிவு செய்தால் அவர்களின் இடத்திற்கே வந்து மாநகராட்சி சார்பில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும், என ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப் பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் 70 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்து நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி இனி ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் மார்க்கெட் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிகளை பாக்கெட் செய்து மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தேநீர் கடைகளில் ஒரு முறை உபயோகிக்கும் பேப்பர் கப் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. பெரிய ஜவுளி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். நுழைவுவாயிலில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும்.
பேருந்துகளில் பயணிகள் நின்று செல்ல அனுமதி இல்லை. இவற்றை கிளை மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி போட 50 நபர்களுக்கு மேல் பதிவு செய்தால் அவர்களின் இடத்திற்கே வந்து மாநகராட்சி சார்பில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா விதிகளை நிறுவனத்தினர் மீறினால் முதல் முறை அபராதம் விதிக்கப்படும், இரண்டாவது முறை சீல் வைக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT