Published : 11 Apr 2021 03:17 AM
Last Updated : 11 Apr 2021 03:17 AM
திருநெல்வேலி/தூத்துக்குடி/ நாகர்கோவில்
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,643 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.17.79 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 19 அமர்வுகளாக லோக் அதாலத் நடத்தப்பட்டது.
திருநெல்வேலியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். குடும்ப நல மாவட்ட நீதிபதி வி.எஸ். குமரேசன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி திருமகள், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ. தீபா, மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜி. விஜயகாந்த், கூடுதல் சார்பு நீதிபதி கிறிஸ்டல் பபிதா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பி.வி. வஷீத்குமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஏ. பிஸ்மிதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கெங்கராஜ், 1-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பையா மற்றும் நீதித்துறை நடுவர்கள் பங்கேற்றனர்.
மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்க கூடிய குற்ற வழக்குகள் உட்பட மொத்தம் 3,281 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.11,41,94,958 வழங்க உத்தரவிடப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி என்.லோகேஷ்வரன் தலைமையில்மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தூத்துக்குடியில் 5 அமர்வுகள், கோவில்பட்டியில் 2, திருச்செந்தூரில் 2, விளாத்திகுளம், சாத்தான்குளம் மற்றும் வைகுண்டத்தில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 12 அமர்வுகளில் மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு, காசோலை மோசடி, வங்கி கடன் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி எஸ்.உமா மகேஸ்வரி, போக்ஸோ நீதிமன்ற நீதிபதி சி.குமார் சரவணன், சார்பு நீதிபதிகள் ஆர்.சாமுவேல் பெஞ்சமின், என்.மாரீஸ்வரி, வரிவிதிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவர் எஸ்.சோமசுந்தரம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.பாஸ்கர், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெ.ஆப்ரீன் பேகம், நீதித்துறை நடுவர் ஆர்.ஹெச்.உமாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், வங்கி வாராக்கடன் தொடர்பான 159 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 64 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மொத்த தீர்வுத் தொகை ரூ.47,00,200 ஆகும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 368 வழக்குகளில் 157 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2,43,79,900 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 527 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 221 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்த தீர்வுத்தொகை ரூ.2,90,79,900 ஆகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஆர்.சாமுவேல் பெஞ்சமின் செய்திருந்தார்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நீதிமன்றம், பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல், பூதப்பாண்டி நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடைபெற்றது. நாகர்கோவில் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி(பொறுப்பு) எழில்வேலவன் தொடங்கி வைத்தார். மாவட்டம்முழுவதும் மொத்தம் 1,669 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 141 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.3 கோடியே 47 லட்சத்து 5 ஆயிரத்து 729 வசூலிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நம்பிராஜன், சிறப்பு நீதிபதி ஆஷா கவுசல்யா சாந்தினி, ஓய்வுபெற்ற நீதிபதி பால்துரை மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT