Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM
நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் கோடிக் கணக்கான ரூபாய் செலவு செய்து ஒரு மாதத்துக்கு மேலாக விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் கடந்த 3 தேர்தல்களாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2016 தேர்தலை விட இம்முறை வாக்குப்பதிவு 1.29 சதவீதம் குறைந்துள்ளது.
விழிப்புணர்வு பிரசாரம்
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் மக்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வம் தொடர்ந்து குறைந்து கொண்டே தான் வருகிறது. கடந்த சில தேர்தல்களில் வாக்காளர் விழிப்புணர்வுக்கு என, தேர்தல் ஆணையம் பல கோடிரூபாய் செலவு செய்கிறது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் சுமார் 1 மாதத்துக்கு மேலாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.ஆனால், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாக்காளர்கள் மத்தியில் எந்த தாக்கத்தையுமே ஏற்படுத்தவில்லை என்பதை, கடந்த மூன்று தேர்தல் வாக்குப்பதிவு சதவீதங்கள் காட்டுகின்றன.
கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. விளாத்திகுளத்தில் 76.1, தூத்துக்குடியில் 73.4, திருச்செந்தூரில் 77.5, வைகுண்டத்தில் 75.1, ஓட்டப்பிடாரத்தில் 75.6,கோவில்பட்டியில் 72.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
குறையும் வாக்குப்பதிவு
இதுவே, 2016 தேர்தலில் 71.17 சதவீதமாக குறைந்தது. அதாவது 2011 தேர்தலை விட 2016 தேர்தலில் 3.83 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்தது. 2016 தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் 74.05 சதவீதம், தூத்துக்குடி தொகுதியில் 68.69 சதவீதம், திருச்செந்தூர் தொகுதியில் 72.60சதவீதம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 74.30 சதவீதம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 72.59 சதவீதம், கோவில்பட்டி தொகுதியில் 66.32 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.இம்முறை தேர்தலில் (2021) வாக்குப்பதிவு சதவீதம் 69.88 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது 2016 தேர்தலைவிட 1.29 சவீதம் குறைவு. இம்முறைவிளாத்திகுளத்தில் 76.55, தூத்துக்குடியில் 65.08, திருச்செந்தூரில் 70.09, ஸ்ரீவைகுண்டத்தில் 72.34,ஓட்டப்பிடாரத்தில் 69.82 கோவில்பட்டியில் 67.43 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. விளாத்திகுளம் தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலுமே கடந்ததேர்தலைவிட இம்முறை வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.
இம்முறை கரோனா தொற்று காரணமாக மக்கள் மத்தியில் நிலவிய அச்சம் காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து வாக்குப்பதிவு சதவீதம்சரிந்து வருவது கவலை அளிப்பதாக அமைந்துள்ளது. தேர்தல் ஆணையம் மட்டும் முயற்சி எடுத்தால் போதாது, மக்கள் மத்தியில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT