Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 1,567 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா, மத்திய போலீஸ் பாதுகாப்பு, மைக்ரோ அப்சர்வர் நியமனம், வெப் கேமரா பொருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தேர்தலையொட்டி பிரச்சினைக்குரிய கரும்புள்ளி கிராமங்கள், பதற்றமான கிராமங்கள், தேர்தல் காலங்களில் பிரச்சினை ஏற்படும் கிராமங்கள், சாதி மத ரீதியாக பிரச்சினைக்குரிய கிராமங்கள், ரவுடிகள் பட்டியல், புதிய நபர்கள் குடியேற்றம் என பல்வேறு வகையில் போலீஸார் கணக்கெடுப்பு நடத்தினர்.
மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையம் வாரியாக, அந்த காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பிரச்சினைக்குரிய கிராமங்கள், நபர்கள், ரவுடிகள் பட்டியல் சேகரிக்கப்பட்டது. ஏற்கெனவே தேர்தல் காலங்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா அல்லது என்ன பிரச்சினைகளுக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டு, பட்டியலிடப்பட்டன.
அந்த பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தின் 7 தொகுதிகளில் மொத்தம் உள்ள 3,833 வாக்குச்சாவடிகளில் 699 பதற்றமானவைஎன கண்டறியப்பட்டுள்ளன. இங்கு 1,932 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் உள்ள 1,872 வாக்குச் சாவடிகளில் 241 வாக்குச்சாவடிகள் பதற்றமான என கண்டறியப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிக்கு மொத்தம் உள்ள 4,902 வாக்குச்சாவடிகளில் 627 பதற்றமானவையாகும். இந்த பதற்றமான அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் மைக்ரோ அப்சர்வர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் அலுவலர்கள் கூறும்போது, அதிக வாக்குப்பதிவு மற்றும் குறைவான வாக்குப்பதிவு இடங்கள் இரண்டுமே பிரச்சினைக்குரியவையாகவும், பதற்றமானவையாகவும் கணக்கில் எடுத்து, தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறோம். இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தபடி கண்காணிக்கலாம். வெப் கேமரா பொருத்தப்படாத வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். பொதுமக்கள் பிரச்சினை இன்றி வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த தேர்தலை எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் இன்றி அமைதியான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT