Published : 31 Mar 2021 03:17 AM
Last Updated : 31 Mar 2021 03:17 AM
மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் திருப்பி செலுத்திய கடன் தொகையை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் அளிக்க காவல் நிலையத்தில் பெண்கள் குவிந்தனர்.
கரூர் மாவட்டம் வாங்கல், மேட்டுப்பாளையம், கடம்பங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் வாங்கலில் உள்ள பல்லவன் கிராம வங்கியில் பல லட்சம் கடன் பெற்றுத் தந்துள்ளது. கடன் பெற்ற சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கடன் தொகை தவணைகளை தொடர்ந்து செலுத்தி, அதற்கான ரசீதுகளை பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில், கடன்பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்லவன் கிராம வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இதுவரை கடன் பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கடன்களை திரும்ப செலுத்தவில்லை. எனவே, உடனடியாக கடனை செலுத்த வேண்டும். கடனை செலுத்தவில்லை எனில், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் நேற்று வங்கியை அணுகி தாங்கள் பெற்ற கடனுக்கான தொகையை தொண்டு நிறுவன முகவரிடம் செலுத்தியுள்ளோம் எனக் கூறி, அதற்கான ரசீதுகளையும் காட்டியுள்ளனர். ஆனால், வங்கி அதிகாரிகள் கடன்தொகை வங்கியில் திருப்பி செலுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த, சுயஉதவிக் குழு பெண்கள் புகார் அளிப்பதற்காக வாங்கல் காவல் நிலையம் முன் நேற்று குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், காவல் நிலையத்தில் தொண்டு நிறுவன முகவர் மீது சுயஉதவிக் குழு பெண்கள் அனைவரும் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வங்கி நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT