Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM

ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி : சாலை மறியலில் ஈடுபட்டோர் மீது தடியடி :

பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் மும்தாஜ்(50). அப்பகுதியில் பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அப்பகுதி மக்கள் பணம் செலுத்தி வந்தனர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக ஏலத் தொகையை கொடுக்காமல் மும்தாஜ் ஏமாற்றியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருவேற்காடு போலீஸார், சென்னை பெருநகர காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். எனினும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், பணம் செலுத்தி ஏமாந்த பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் திருவேற்காடு வேலப்பன்சாவடியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த திருவேற்காடு போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்துபோகுமாறு தெரிவித்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்துசெல்ல மறுத்ததுடன், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் லேசான தடியடி நடத்தி, 100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x