Published : 30 Mar 2021 03:17 AM
Last Updated : 30 Mar 2021 03:17 AM
திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இரும்புக்கரம் கொண்டு காக்கப்படும் என வேலூர் அருகே நடந்த பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி யளித்தார்.
வேலூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக துரைமுருகன் (காட்பாடி), ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), அமலு விஜயன் (குடியாத்தம்), சீதாராமன் (கே.வி.குப்பம்) ஆகியோரை ஆதரித்து ஊசூர் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ‘‘இந்த தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில்கூட ஜெயிக்கக்கூடாது. பாஜக ஜெயிக்கப்போவதுமில்லை. அவர்கள் குட்டிக்கரணம் போட்டாலும் நுழைய முடியாது. முதல்வர் பழனிசாமி, ஊர் ஊராகச் சென்று பொய் பிரச்சாரம் செய்கிறார். அப்பட்டமாக அபாண்டமாக பொய் சொல்கிறார். நான் படிப்படியாக வளர்ந்துவந்ததாக சொல்கிறார். அவர் ஊர்ந்து வந்தார், தவழ்ந்து வந்தார், தவ்வித்தவ்வி வந்தார்.
ஆனால், நான் உழைத்து வந்தேன் என்பதை தொண்டர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள லாம். கருணாநிதி 13 வயதில் பள்ளிக்கூடத்தில் படித்திருந்த போது அரைக்கால் சட்டை போட்ட மாணவராக, சக நண்பர்களை அழைத்துக்கொண்டு இந்தி திணிப்பை எதிர்க்க திருவாரூர் தெற்கு வீதியில் ஊர்வலம் நடத்தினார். அதேபோல், நானும் 14 வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் திமுகவை உருவாக்கி, பிறகு பகுதி பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட கழக பிரதிநிதியாக, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினராக படிப்படியாக உயர்ந்து இளைஞரணி செயலாளர், துணை பொதுச் செயலாளர், பொருளாளாராக, செயல் தலைவராகவும், கருணாநிதி மறைவுக்குப் பிறகு தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
பதவியில் சட்டப்பேரவை உறுப்பினராக, மேயராக, உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதல்வராக, எதிர்கட்சி தலைவராக நாளைக்கு...? இந்தப் பதவிகளை எல்லாம் பதவிகளாக நினைக்க வில்லை. உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பது ஸ்டாலின் என்று கருணாநிதியால் பாராட்டு பெற்றேன். எனவே, அதைவிட வேறு பதவி எதுவும் இல்லை.
இன்று நம்மைப் பார்த்து சட்டம் ஒழுங்கை கெடுத்தது திமுக என்று அதிமுகவினர் சொல்கின்றனர். அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா, தினசரி சங்கிலி பறிப்பு என பத்திரிகைகளில் வெளிவருகிறது. .
ஒரு உறுதியை உங்கள் மூலமாகநாட்டுக்கு தெரிவிப்பது என்ன வென்றால், விரைவில் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு இரும்புக்கரம் கொண்டு காக்கப்படும். காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்குவேன்.
தமிழகத்தில் காலியாக உள்ள 3.50 லட்சம் காலிப் பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள். பொதுத்துறை நிறுவனகங்ளில் 75 சதவீதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற சட்டம் நிறைவேற்றப்படும். திமுக ஆட்சிக்கு வந்ததும் கரோனா நிவாரணத் தொகை ரூ.4 ஆயிரம் வழங்குவோம். அதையும் கருணாநிதி பிறந்த ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும். கரோனா சூழல் முடியும்வரை சொத்து வரி வசூலிக்கப் படாது. மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும்’’ என்றார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஆர்.காந்தி (ராணிப்பேட்டை), ஈஸ்வரப்பன் (ஆற்காடு), முனிரத்தினம் (சோளிங்கர்), கவுதம் சன்னா (அரக்கோணம்) ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து ராணிப்பேட்டையில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘முதல்வர் பழனிசாமி இப்போது வாய்க்கு வந்தபடி உளறுகிறார். இயற்கையும் கடவுளும் எனக்கு துணையாக இருப்பதாக பேசி இருக்கிறார். அவர் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறார்.
அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இயற்கை பேரிடர்தான் அதிகம் நடக்கிறது என்பது பல சாட்சிகள் இருக்கிறது. உயிர்களை காவு வாங்கிய சுனாமி, வாழ்வாதாரத்தை பாதித்த தானே புயல், வெள்ளத்தில் மிதந்த சென்னையை மீட்க இரண்டு மாதங்கள் ஆனது. ஒக்கி புயல், கஜா புயல், நீலகிரி நிலச்சரிவு, நிவர் புயல், புரெவி புயல் என சொல்லிக்கொண்டே செல்லலாம்.
பேரிடர் காலங்களில் முதல்வர் மக்களை சந்திக்கணும். அதை யாவது செய்தாரா? என்றால் இல்லை. இதெல்லாம் மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டு இயற்கையை இறை வனையும் கூப்பிடுகிறார். இயற்கையும், கடவுளும், மக்களும் காப்பாற்ற மாட்டார்கள். இந்த உண்மையை பழனிசாமி வரும் ஏப்ரல் 6-ம் தேதி நன்றாக தெரிந்து கொள்வார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT