Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM
திருப்பூர் மாவட்டம் படியூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையிலுள்ள சிவகிரிபுதூர் அருகே கெயில் நிறுவனம் சார்பில்அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய் சேமிப்பு கிடங்குக்கு முன்பு ,திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கெயில் எரிவாயு குழாய் சேமிப்பு கிடங்கு பகுதியில் குழாய்களை இறக்கினால் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். இதில் பங்கேற்றவர்கள் பேசியதாவது: கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள நிலத்தின் மதிப்பை பறிக்கும் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் சாலையோரமாக அமல்படுத்தப்படும் என்று, 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு, மீண்டும் அதே திட்டத்தை விவசாயவிளை நிலங்கள் வழியாக செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது, விவசாயிகளின் நில உரிமைக்கு இழைக்கப்பட்ட துரோகம். இதனால், தற்போது கெயில் நிறுவனம் தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் திட்டப் பணிகளைத் தொடங்குவதற்கு குழாய்களை இறக்கி வைக்கும் பணியை நடத்தி வருகிறது. இதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளதாக அறிந்தோம். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.
எரிவாயு குழாய் சேமிப்பு கிடங்கின் முன்பு விவசாய சங்கத்தினர் கொடிகள் கட்டி மறித்தனர். இவற்றை மீறி குழாய்களை இறக்கினால், தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், கொள்கை பரப்புச் செயலாளர் சிவகுமார், படியூர் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துராமலிங்கம், பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம், பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT