Published : 28 Mar 2021 03:19 AM
Last Updated : 28 Mar 2021 03:19 AM

நெடுங்குணம் ராமச்சந்திரா பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் : அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பரப்புரை

போளூர் அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி.

திருவண்ணாமலை

போளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஜெகநாதபுரம், அரசம்பட்டு, மேலதாங்கள், விசாமங்கலம், மேல்வில்லிவலம், வேப்பம்பட்டு, மேல்நந்தியம்பாடி, நெடுங்குணம் ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும்போது,“தமிழகத்தில் தொடர்ந்து அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு மக்கள் நல்லாதரவு வழங்கி வருகின்றனர். நல்லாட்சி நடப்பதற்கு நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி, நகைக் கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கிராமங்கள்தோறும் அம்மா மினி கிளினிக்குகள் போன்றவை செய்து கொடுத்துள்ளார். மேலும், தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 1,500 ரூபாய், வருடத்துக்கு 6 காஸ் சிலிண்டர்கள், வாஷிங் மெஷின், 100 யூனிட் இருந்த இலவச மின்சாரம் 200 யூனிட் மாற்றுவது போன்ற பல்வேறு அறிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த அனைத்து திட்டங்களும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கர்ப்பிணிதாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த 18 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தற்போது 22 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட உள்ளது. அதேபோல், வீட்டில் படித்த ஒருவருக்கு அரசு வேலை போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

எனவே, இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால் அனைத்து நலத் திட்டங்களையும் பெற்று வந்து தருவேன்.

மேலும், நெடுங்குணம் கிராமத் தில் பிரசித்திப் பெற்ற ராமச்சந்திரா பெருமாள் கோயிலும் மற்றும் ஈஸ்வரன் கோயிலும் உள்ளது. இந்த இரண்டு கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 வருடங்களுக்கு மேல் ஆகிறது என்பதால், இந்த இரண்டு கோயில்களுக்கும் வெற்றி பெற்ற பின்பு உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். மேலும், தேர் செல்லும் பாதையை அகலப்படுத்தும் சாலையாக அமைத்துத் தரப்படும்” என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x