Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM
காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் கிராமத்தில் 450 ஏக்கர் விவசாய நிலங்கள் அனாதீனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் 130 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த கிராம விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
கீழ்கதிர்பூர் கிராமத்தில் 130 விவசாயிகளிடம் உள்ள 450 ஏக்கர் விவசாய நிலங்கள் அரசு ஆவணங்களில் அனாதீனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக விவசாயிகள் கடந்த 1971-ம் ஆண்டில் இருந்து பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக மனு கொடுத்து வந்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில் புறவழிச் சாலை அமைப்பது, பேருந்து நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளின்போது அரசு கணக்கில் இவர்களிடம் உள்ள நிலங்கள் அனாதீனம் என்று இருப்பதால் இழப்பீடு இல்லாமல் நிலத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதைத் தொடர்ந்து கீழ்கதிர்பூர் விவசாயிகள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தங்களின் பூர்விக குடிகளின் ராயத்து வரி நிலமாக இருந்த விவசாய நிலங்கள் அனாதீனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளதாகவும், தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அதிகாரிகள் கூறுவதற்கும் கடும் கண்டனம் தெரிவித்து இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய அப்பாவு எம்எல்ஏ தலைமையில் வந்த சட்டப்பேரவைக் குழுவினர் பட்டா வழங்க பரிந்துரை செய்ததும் கிடப்பில் உள்ளது. நில நிர்வாக ஆணையர் அலுவலகம், நில அளவைத் துறை அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் கொடுக்கப்பட்ட மனுக்கள் அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படவில்லை.
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு நடைபெற உள்ள தேர்தலை புறக்கணிப்பது என்று கீழ்கதிர்ப்பூர் கிராம விவசாயிகள் முடிவு செய்தனர். இந்த தீர்மானம் பொதுக் குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு கிராம மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT