Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM
திண்டிவனம் அருகே ஆலத்தூர் கூட்டுச்சாலையில் நேற்று காலை பறக்குபடை அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். லாரியில் வந்த கேரள மாநிலம், ஆலப்புழா அருகே சிரதலக்கால் பரவூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (40) என்பவரிடமிருந்து உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ 59,370 பணத்தை பறிமுதல் செய்து திண்டிவனம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
திண்டிவனம் அருகே எண்டியூர் பகுதியில் பறக்கும்படை அலுவலர் அன்பழகன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி, லாரியில் இருந்த 58 மூட்டைகளை சோதனை செய்தபோது, அதில், உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. அதை பறிமுதல் செயது பிரம்மதேசம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். லாரியை ஓட்டிவந்த திண்டிவனம், உமர்புலவர் தெருவைச் சேர்ந்த ஜஹாங்கீர் (40 ) என்பவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செஞ்சி அருகே மேல்பாப்பாம்பாடி கிராமம் அருகே பறக்கும்படை அலுவலர் லோகநாதன் தலைமையிலான குழுவினர் நேற்று முன் தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். காரை ஓட்டிவந்த கர்நாடக மாநிலம், பெங்களூரூ அருகே சித்தபுரா பகுதியைச் சேர்ந்த சென்னப்பா மகன் நாகராஜ் (55) என்பவரிடம் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ 1.15 லட்சத்தை பறிமுதல் செய்து செஞ்சி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
திண்டிவனம் அருகே ஆலத்தூர் கூட்டுச்சாலையில் நேற்று முன் தினம் இரவு பறக்குபடை அலுவலர் சீதாலட்சுமி தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கில் வந்த மரக்காணம் அருகே வடநெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் செல்வம் என்பவரிடமிருந்து உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ53,800 ஐ பறிமுதல் செய்து, திண்டிவனம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT