Published : 21 Mar 2021 03:16 AM
Last Updated : 21 Mar 2021 03:16 AM
நிறைவேற்ற முடியாத கற்பனைகளை தேர்தல் அறிக்கையாக அதிமுக வெளியிட்டுள்ளதாக திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல்பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருநெல்வேலி தொகுதி திமுகவேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன்,பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் அப்துல் வகாப், அம்பாசமுத்திரம் தொகுதி வேட்பாளர் ஆவுடையப்பன், ராதாபுரம் தொகுதி வேட்பாளர் மு.அப்பாவு, நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோரை அறிமுகம் செய்து, திருநெல்வேலி டவுன் வாகையடி முனை பகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
தவழ்ந்து, ஊர்ந்துபோய் முதல்வர் பதவிக்கு பழனிசாமி வந்ததாக நான் குறிப்பிட்டது, அவரை அவமானப்படுத்துவதற்கு இல்லை.நடந்ததை சொன்னேன். அனைவரும் சமூக வலைதளங்களில் அதை பார்த்துள்ளார்கள். இதை சொன்னதற்காக என் மீது வழக்கு போடுங்கள். அந்த காட்சியை பார்த்தவர்கள் அத்தனைபேர் மீதும் வழக்கு போடுங்கள். நான் ஊர்ந்து போவதற்கு பாம்பா, பல்லியா என்றுமுதல்வர் கேட்டுள்ளார். பாம்பு, பல்லி விஷத்தைவிட துரோகம் என்ற விஷம்தான் பெரிய விஷம். யாரால் பதவிக்கு வந்தாரோ அவருக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர், இப்போது அதிமுகவுக்கு துரோகம் செய்கிறார். பாஜகவின் கிளைக் கழகமாக அதிமுக மாறிவிட்டது.
வழக்கு வாபஸ் பெறப்படும்
நாளுக்குநாள் விலைவாசி விஷம்போல் ஏறிவருகிறது. ஆனால் பழனிசாமியும், மோடியும்மக்கள் மீது வரிகளை போடுகிறார்கள். ரேஷன் கடைகளில் தரமில்லாத பொருட்களை மக்கள் தலையில் கட்டுகிறார்கள். தமிழகத்தில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை தவிர்த்து தேவையில்லாத பொருட்களை மக்கள் தலையில் கட்டுகிறார்கள் என்று, ரேஷன் கடை பணியாளர்கள் அமைப்பே குற்றம் சாட்டியுள்ளது.
நடக்கவே நடக்காது
திமுக ஆட்சியில் நிலமற்ற ஏழைகளுக்கு இலவசமாக நிலம் தரப்படவில்லை என்று முதல்வர் பொய் சொல்கிறார். கடந்த 2006-ல்1,89,719 ஏக்கர் நிலத்தை திமுக ஆட்சியில் கொடுத்துள்ளோம். இதை முதல்வர் மறுக்க தயாரா?. அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கிறார்கள். ஆனால் கடந்தகாலங்களில் அதற்கான முயற்சியையே அவர்கள் மேற்கொள்ளவில்லை.தற்போது குடும்பத்துக்கு ஒருவருக்கு அரசு வேலை என்று தெரிவித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட கற்பனை. தமிழகத்தில் 1.97 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. அத்தனை பேருக்கும் வேலை கொடுக்க முடியுமா?. நடக்கவே நடக்காது என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT