Published : 21 Mar 2021 03:16 AM
Last Updated : 21 Mar 2021 03:16 AM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 206 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட உள்ளன.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி நேற்றுமுன்தினம் (19-ம் தேதி) பிற்பகல்3 மணியுடன் நிறைவுபெற்றது. இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 89 மனுக்கள், வேலூர் மாவட்டத்தில் 116 மனுக்கள், திருப்பத்தூர்மாவட்டத்தில் 113 என மொத்தம்318 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது தொகுதிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலனை செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்
அரக்கோணம் தொகுதியில் பெறப்பட்ட 18 மனுக்களில் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 13 மனுக்கள் ஏற்கப்பட்டதன. சோளிங்கர் தொகுதியில் பெறப்பட்ட 28 மனுக்களில் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 22 மனுக்கள் ஏற்கப்பட்டன. ராணிப்பேட்டை தொகுதியில் பெறப்பட்ட 22 மனுக்களில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 15 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஆற்காடு தொகுதியில் 21 மனுக்களில் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 12 மனுக்கள் என மாவட்டத்தில் மொத்தம் 62 மனுக்கள் ஏற்கப்பட்டன.
வேலூர் மாவட்டம்
காட்பாடி தொகுதியில் பெறப்பட்ட 22 மனுக்களில் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 17 மனுக்கள் ஏற்கப்பட்டன. வேலூர் தொகுதியில் பெறப்பட்ட 24 மனுக்களில் 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 20 மனுக்கள் ஏற்கப்பட்டன. அணைக்கட்டு தொகுதியில் 23 மனுக்களில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 15 மனுக்கள் ஏற்கப்பட்டன. கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 19 மனுக்களில் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 10 மனுக்கள் ஏற்கப்பட்டன.குடியாத்தம் (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பரிதா, கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் மனு அளித்தார். ஆனால், வேட்பாளர் பரிதா சமர்ப்பித்த மனுவுடன் கூடிய ஆவணங்கள் போதுமானதாக இருந்ததால் அவரது மனுவை ஏற்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக் மன்சூர் தெரிவித்தார். புகார்தாரருக்கு தேவையிருந்தால் நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தப்பட்டது. குடியாத்தம் தொகுதியில் பெறப்பட்ட 28 மனுக்களில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 21 மனுக்கள் ஏற்பட்டன.
திருப்பத்தூர் மாவட்டம்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதியில்தான் அதிகப்படியாக 35 மனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு பரிசீலனையின்போது மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதில், மக்கள் ஜனநாயக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட துணை செயலாளர் ரபீக் அஹ்மது என்பவர் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் முன்மொழிந்த 10 பேரில் 2 நபர்களின் பெயர்கள் திருப்பத்தூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. முடிவில், 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 17 மனுக்கள் ஏற்கப்பட்டன.
நாளை இறுதி பட்டியல்
தொகுதி வாரியாக ஏற்கப்பட்ட நிலையில் மனுக்களை திரும்பப்பெற நாளை பிற்பகல் 3 மணியுடன் கடைசி. அதன் பிறகு இறுதிவேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் பெயர்களுடன் அவர்களுக்குரிய சின்னங்களும் அச்சடிக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி நடைபெறும்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT