Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM
ஜிஎஸ்டி, சமையல் காஸ் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம்கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினர்.
திருப்பூரில் நேற்று முன்தினம்இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், அக்கட்சி சார்பில் போட்டியிடும் சு.சிவபாலன் (திருப்பூர் வடக்கு), அனுஷா (திருப்பூர் தெற்கு), மயில்சாமி (பல்லடம்), மருத்துவர் வெங்கடேஷ்வரன் (அவிநாசி), சார்லி (தாராபுரம்) ஆகியோரை ஆதரித்து அவர் பேசியதாவது:
இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் என மக்கள் நீதி மய்யம் கூறியது. 50 ஆண்டுகளாக கூறிய எதுவும் செய்யாதவர்கள், இன்றைக்கு அதனையும் சொல்கிறார்கள்.
ஊருக்குள் பாதாள சாக்கடை என்பது மங்கள்யான் போன்ற ராக்கெட் விடும் அறிவியல் இல்லை.தாலிக்கு தங்கம் கொடுத்துவிட்டு, டாஸ்மாக் மூலமாக மக்களிடம் இருந்து ஏன் வருவாயை எடுக்கவேண்டும்? இன்றைக்கு 100 அடிக்குஒரு டாஸ்மாக் கடை உள்ளது. ஏன் அரசு இதனை நடத்த வேண்டும்?. டாஸ்மாக் மூலமாக ஆண்டுக்கு ரூ.36,000 கோடி வருவாய் வருகிறது.இலவசம் யாருக்கு வேண்டும்?. வேலை தந்தால் முதலாளியாக மாறுவார்கள். இலவசத்தை தந்து மக்களை மேலும் ஏழ்மையாக்க வேண்டாம். உலகத் தரத்தில் இலவச கல்வி, மருத்துவம் வழங்கப்படும். அரசியல் எனக்கு தொழில் இல்லை. ஆனால், இதனை முழுநேரமாக செய்பவர்களை விடமாட்டேன். நிராகரிக்கப்பட்ட உரிமைகளை மீட்கும் வரை இடஒதுக்கீடு வேண்டும்.
‘இரட்டை இலை’ இருவருக்கான ‘விருந்து இலை’ அல்ல!. தாமதமாக அரசியலுக்கு வந்தாலும், எஞ்சிய வாழ்க்கை உங்களுக்குதான். இது திரைப்பட வசனம் இல்லை. பணமதிப்பு நீக்கம் வந்தபோது வரவேற்றேன். ஆனால், பணமதிப்பு நீக்கத்தால் பெரும் பாதிப்புதான் ஏற்பட்டது. கொங்கு மண்டலத்திலும் பாதிப்பு இருந்தது.அடுத்ததாக ஜி.எஸ்.டி., சமையல்எரிவாயு விலை உள்ளிட்டவற்றாலும் கடும் பாதிப்பை மக்கள் சந்திக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
பொள்ளாச்சி
மக்கள் நீதி மய்யத்தின் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் சதீஷ்குமார், வால்பாறை தொகுதி வேட்பாளர் செந்தில்ராஜ் ஆகியோரை ஆதரித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கமல்ஹாசன் திறந்த வேனில் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அவர் பேசும்போது, “சட்டப்பேரவையில் எங்களுக்கு வாய்ப்புகொடுத்தால் உங்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அதை உங்கள் வாழ்நாளிலேயே பார்க்க முடியும். எங்களால் நேர்மையான செயல்களை செய்து காட்ட முடியும்.
மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை செய்து காட்டக் கூடியவர்களைதான் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளோம். குடும்பத்தில் உள்ள அனைவரும் நேர்மைக்கு வாக்களிக்க வேண்டும். ரூபாய் ஐந்தாயிரம் பெற்றுக்கொண்டு வாக்களித்தால் ஐந்து ஆண்டுகள் அவர்கள் நம்மை குத்தகைக்கு எடுத்துக்கொள்வார்கள். மக்கள் நீதி மய்யத்தின் அஸ்திவாரமே நேர்மைதான்” என்றார்.
கோவை
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் நேற்று பிற்பகல் அம்மன் குளம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அம்மன் குளம் ஹவுசிங் யுனிட் பகுதி மக்கள் கமல்ஹாசனை சூழ்ந்து கொண்டு, பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு கமல்ஹாசன் பொறுமையாக பதிலளித்தார். மேலும், அப்பகுதியில் வீதி,வீதியாகச் சென்று, சாக்கடைக்கால்வாய், சாலை, குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்தார்.
சுகாதாரச் சீர்கேடு, மழைக் காலத்தில் தண்ணீர் தேங்குவது, கொசுத் தொல்லை உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தபோது, தான் வெற்றி பெற்றவுடன் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக கூறினார். தொடர்ந்து, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, கரும்புக்கடை பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT