Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM
செங்கல்பட்டு பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதையும், அரசின் வழிகாட்டுதல்களை நிறுவனங்கள் பின்பற்றுவதையும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரம் மற்றும் வருவாய்த் துறையினர் கண்காணிக்க வேண்டும். விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். இதனால், பாதுகாப்பு நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் நேற்று போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்தனர்.
தற்போது தேர்தல் காலம் என்பதால் வேட்பாளருடன் செல்லும் பலர் முகக்கவசம் அணியாமல் வாக்கு சேகரிக்கின்றனர். வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், பிரச்சாரம், பொதுக்கூட்டம் ஆகியவற்றில் ஒரு சிலர் தவிர பலர் முகக்கவசம் அணிவதில்லை. இதனால், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் முகக்கவசம் அணியாமல் விதிகளை மீறும்போது எவ்வளவு பேர் என கணக்கெடுத்து சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT