Published : 14 Mar 2021 03:17 AM
Last Updated : 14 Mar 2021 03:17 AM

இளையரசனேந்தல் பிர்காவுக்கு தேர்தல் நடத்தப்பட்டதாக - உயர் நீதிமன்றத்தில் தவறான தகவல் : வழக்கு முடித்து வைப்பு, கிராம மக்கள் அதிர்ச்சி

இளையரசனேந்தல் பிர்காவுக்கு உட்பட்ட 12 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் தவறான தகவல் அளிக்கப்பட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதனால் 12 கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவில்பட்டியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது இளையரசனேந்தல் கிராமம். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், குருவிகுளம் ஊராட்சியில் உள்ள இளையரசனேந்தல் பிர்காவுக்கு உட்பட்ட 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று கடந்த 01.05.2008-ம்ஆண்டு 12 ஊராட்சிகளும் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. இதை தொடர்ந்து வருவாய், மின்சாரம், கல்வி, போக்குவரத்து, வேளாண், காவல், நீதிமன்றம் உள்ளிட்ட துறைகள் மாற்றப்பட்டன. ஆனால், உள்ளாட்சித்துறை மட்டும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலேயே நீடிக்கிறது.

இதைக் கண்டித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட் டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என கடந்த ஜூலை 18-ல் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்

தமிழகம் முழுவதும் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் சேர்த்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவற்றை தவிர்த்து ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டுகள் மறுவரையறை, இடஒதுக்கீடு ஆகியவற்றை முறையாகவரைமுறை செய்த பின்னர் தேர்தல் நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில், 9 வருவாய் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என கடந்த 06.12.2019-ல் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இதன் அடிப்படையில் கோவில்பட்டி அருகே ஜமீன் தேவர்குளத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அ.ஜெயபிரகாஷ் நாராயணசாமி, இளையரசனேந்தல் பிர்காவுக்கு உட்பட்ட 12 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தரப்பில் இளையரசனேந்தல் பிர்காவுக்கு உட்பட்ட 12 ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடத்திமுடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், வழக்கை முடித்து வைப்பதாக கடந்த 24.02.2021-ல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதனை அறிந்த இளையரசனேந்தல் பிர்கா கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அ.ஜெயபிரகாஷ் நாராயணசாமி “இந்து தமிழ்” நாளிதழிடம் கூறும்போது, ‘‘இளையரசனேந்தல் பிர்காவுக்கு இதுவரை தேர்தல் நடத்தப்படாத நிலையில் நடத்தப்பட்டதாக தவறான தகவல் தெரிவித்துள்ளது நீதிமன்ற அவமதிப்பாகும். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளேன்’’ என்றார்.

ஆட்சியர் பரிந்துரை

இதனிடையே குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி அலகில் சேர்க்கவும், இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கவும் பரிந்துரை செய்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சார்பில் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குருக்கு கடந்த 10.02.2020-ல் பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x